×

நேஷனல் ஹெரால்டு வழக்கு ராகுல் காந்தியிடம் 3ம் நாளாக விசாரணை: காங். அலுவலகத்தில் நுழைந்தது போலீஸ்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக 3வது நாளாக நேற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தியது. இவரிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த 1ம் தேதி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் கடந்த 13, 14ம் தேதிகளில் ஆஜரான ராகுல் காந்தியிடம் இத்துறை அதிகாரிகள் 17 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்றும் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். பிற்பகல் 12 மணிக்கு ஆஜரான அவரிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர். பிற்பகல் 3 மணிக்கு மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்ற ராகுல், மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நேற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கியும், தரதரவென்று இழுத்து சென்றும் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி.க்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதி மணியையும் சாலை மறியல் செய்தபோது, அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

அக்பர் சாலை முதல் அப்துல் கலாம் சாலை வரையில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அருகே தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது தொண்டர் ஒருவரை போலீசார் ஒருவர் துரத்தி வந்தார். அவர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் ஓடிவிட்டார். இதனால், இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து அந்த தொண்டரை வெளியே இழுத்து வந்தனர்.  காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* நாளையும் ஆஜராக உத்தரவு
ராகுலிடம் நேற்று காலையும், மாலையும் மொத்தம் 8ம் மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மாலை 4.30 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்த ராகுலிடம் இரவு 9.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நாளையும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

* ஆளுநர் மாளிகை முற்றுகை
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் போலீசார் நேற்று நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகையை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Tags : National Herald ,Rahul Gandhi ,Cong. , National Herald case against Rahul Gandhi on 3rd day: Cong. Police entered the office
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...