×

சிலாவட்டம் கொள்முதல் நிலையத்தில் நெல் வாங்குவதில் பாரபட்சம்: விவசாயிகள் வேதனை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் சிலாவட்டம் ஊராட்சி ஒழுப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சிலாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் நெல்லை வரிசையாக கொள்முதல் செய்யவேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு நடைபெறுவது கிடையாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நெல்கொள்முதல் மையத்தில் வியாபாரிகளின் நெல்லை வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உண்டான தொகையும் குறிப்பிட்ட நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ‘’கடந்த மாதம் 7ம்தேதி என்னுடைய நெல் இங்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் எனக்கு பணம் இதுவரை வந்து சேரவில்லை’’ என்றார்.

கூடலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ‘’கடந்த மாதம் சுமார் 100 மூட்டைகள் கொண்டு வந்தேன். ஆனால் இதுவரை என்னுடைய நெல்லை கொள்முதல் செய்யவில்லை’ என்றார். இதேபோல் பல விவசாயிகள் தங்களது குமுறல்களை தெரிவித்துள்ளனர். ஆனால் வியாபாரிகளிடம் இருந்துதான் நெல்லை கொள்முதல் செய்வதற்கு அலுவலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுமட்டுமின்றி நெல் கொள்முதல் நிலைய அலுவலராக உள்ள ஜெயராணி என்பவரின் கணவர் நெல் கொள்முதல் நிலைய பணிகளில் தலையிட்டு யாருடைய நெல்லை முதலில் கொள்முதல் செய்யவேண்டும் யாருடைய நெல்லை தாமதமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறாராம். இதுவும் விவசாயிகள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags : Chilaw Procurement Station , Tower Lights, Minister S. M. Nasser,
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ