மீஞ்சூர் அருகே காதல் தகராறில் உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்து விவசாயி கொலை: 3 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டூரில் காதல் தகராறு காரணமாக உருட்டு கட்டையால் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (55). விவசாயி. இவரது மகள் திவ்யா. இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினரான கண்ணன் காதலித்தார். இந்த விவகாரம் ஜீவானந்தத்துக்கு தெரியவந்தது. ஏற்கனவே, கண்ணன், நடவடிக்கை சரியில்லாதவர். அவருக்கு எப்படி திருமணம் செய்து கொடுப்பது’ என்ற கோபம் இருந்துள்ளது. அதனால் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான யுவராஜ் என்பவருக்கு திவ்யாவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார் ஜீவானந்தம்.

திருமணத்துக்கு பிறகு யுவராஜ், மனைவி திவ்யாவை  அழைத்து கொண்டு மாமனார் வீடான காட்டூருக்கு அவ்வப்ேபாது வருவது வழக்கம். அப்போதெல்லாம் கண்ணனை ஒருதலையாக யுவராஜ் திட்டியுள்ளார்.  ‘எப்போதும் நம்மை திட்டுகிறாரே’ என்ற ஆதங்கம் கண்ணனுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காட்டூருக்கு வந்த யுவராஜை வழிமறித்து, ‘எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் எதற்காக என்னிடம் அடிக்கடி தகராறு செய்கிறாய்’ என்று கண்ணன் கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையறிந்த யுவராஜின் மாமனார் ஜீவானந்தம் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கண்ணனிடம் வாக்குவாதம் செய்தார். இதையறிந்த கண்ணனின் அண்ணன் முத்து மற்றும் உறவினர்களும் வந்தனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த முத்து மற்றும் உறவினர்கள் உருட்டுக்கட்டையால் ஜீவானந்தத்தை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயத்துடன் அலறி துடித்தார். உடனே அவரை, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலையில் ஜீவானந்தம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து காட்டூரை சேர்ந்த முத்து (29), நித்தியானந்தம் (36), ராஜேஷ் குமார் (30) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: