×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் கைவிட்ட மகன்கள் மீது தாய் கண்ணீர் மல்க புகார்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மகன்கள் வயதான காலத்தில் தன்னை சரியாக கவனிக்கவில்லை என தாய் கண்ணீர் மல்க புகார் அளித்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதில், செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 65 வயதான மூதாட்டி மலர்விழி கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். அம்மனுவில், காஞ்சிபுரம் வட்டம் செம்பரம்பாக்கம் கிராமத்தில் எனது கணவனுடன் வாழ்ந்து வந்தநிலையில் கணவரின் இறப்புக்குப் பின் தனது குடும்ப சொத்துக்களை எனது இரு மகன்கள், ஒரு மகள் மற்றும் எனக்கும் சேர வேண்டியது என ஒரு வீட்டுமனை மற்றும் ஏழு ஏக்கர் நிலங்களை கூட்டாக எழுதி வைத்திருந்தார்.மேலும், தனது 25 சவரன் நகையை எனது மகன் வாங்கி வைத்துக்கொண்டு எனது தாய் வழி சொத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு எனக்கும் எனது மகளுக்கும் தராமல் அலைக்கழித்து வருகிறார்.

இது குறித்து கடந்த நவம்பர் மாதம் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மனு கொடுத்தேன். அந்த மனு மீதான விசாரணைக்கு பின் வருவாய் கோட்டாட்சியர், எனது இரு மகன்களும் தலா ரூ5 ஆயிரம் பராமரிப்புச் செலவுக்கு வங்கி கணக்கின் மாதந்தோறும் எனக்கு செலுத்த வேண்டும். சொத்துக்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.இந்த உத்தரவுகளை மதிக்காத எனது மகன்கள் பராமரிப்பு செலவையும் தரமுடியாது என்று மறுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனக்கு கேன்சர் வியாதி உள்ளதால் எனது மகள் தான் பராமரித்து வருகிறார். அவருக்கு நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே, எனக்கு உரிய நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மூதாட்டி மலர்விழி கண்ணீர் மல்க மகன்கள் மீது புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Malka ,Kanchipuram , Mother sheds tears over abandoned sons in Kanchipuram riots
× RELATED வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த...