சென்னையில் இருந்து மீண்டும் புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி: சென்னையில் இருந்து வரும் சொகுசு கப்பலை புதுச்சேரியில் அனுமதிக்கக் கூடாது என அதிமுக உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். பயணிகளிடம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் சூதாட்ட கப்பல் புதுவைக்கு வந்து செல்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் சொகுசு கப்பலுக்கு புதுச்சேரியில் அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி காலை சென்னையில் இருந்து சொகுசு கப்பல் புதுச்சேரி வந்தது. பாண்டி மெரினாவில் இருந்து 4 நாட்டிக்கல் தூரத்தில் அந்த கப்பல் நின்றிருந்த நிலையில், அரசு அனுமதி அளிக்காததால் திரும்பிச் சென்றது. இந்த நிலையில் அந்த சொகுசு கப்பல், சென்னையில் இருந்து நேற்று காலை மீண்டும் புதுச்சேரி வந்தது. புதுச்சேரி கடற்கரையில் இருந்து 6 நாட்டிக்கல் தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலை புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பயணிகளும், நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்களும் கடற்கரையில் இருந்து பார்வையிட்டனர். கப்பலில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வந்திறங்க அரசு அனுமதிக்கவில்லை. இதனால் சொகுசு கப்பல் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது.

Related Stories: