×

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: திமுக நிர்வாகிகள் பங்ககேற்பு

சென்னை: இந்திய ஜனாதிபதியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில்  திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நாட்டின் 15வது ஜனாதிபதி பதவிககான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 776 எம்பிக்கள், 4,033 எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். இவர்களுக்கு 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 மதிப்பிலான வாக்குகள் உள்ளன. இதில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்கு பெறுபவர் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

இந்த தேர்தலில் வெற்றிபெற பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 மதிப்பிலான வாக்குகள் கைவசம் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட இரு அணியையும் சேராத மாநிலக் கட்சிகளிடம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 194 வாக்குகள் உள்ளன. பாஜ கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு குறைந்த மதிப்பிலான வாக்குகளே தேவை என்பதால், சில மாநிலக் கட்சிகளின் ஆதரவை பாஜவின் குடியரசு தலைவர் வேட்பாளர் பெறும்பட்சத்தில், அவர் எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பாஜ வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. இதற்கான முயற்சியை அகில இந்திய காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார்.

மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு வரும் 15ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்த கடிதம் மூலம் அழைப்பு விடுக்கிறோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ்  இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கும் மம்தா அழைப்பு விடுத்திருந்தார். இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஆலோசனைகளை நடத்த மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. அவர் அடுத்த வாரம் தமிழகம் வந்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் குடியரசு தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆதரவு கேட்க திட்டமிட்டுள்ளார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிடம் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் இருக்கிறது. 133 எம்எல்ஏக்கள் 34 எம்பிக்கள் பலத்துடன் இருக்கின்றனர். இதனால் யாரை வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்பதில் திமுகவின் பங்கு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் சோனியா காந்தி அழைப்பு மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் திமுக தரப்பில் வலியுறுத்தப்படும் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பாகவும்,  எந்த வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவு தருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க நேரம் கேட்டுள்ளது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் வருகிற 15ம் தேதி காலை 10 மணியளவில் டெல்லியில்  ஆலோசனை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 3 மணியளவில் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : CM ,K. Stalin , Chief Minister MK Stalin's key advice on the presidential election: DMK executives' participation
× RELATED வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக...