×

2 ஆண்டாக ஏழுமலையாைன காணாத பக்தர்களுக்காக அமெரிக்காவில் 8 நகரத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் வரும் 18ம் தேதி முதல் அமெரிக்காவில் உள்ள 8 நகரங்களில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடத்தப்பட உள்ளது. திருமலையில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா அளித்த பேட்டி வருமாறு:

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க முடியவில்லை. எனவே, மாநில முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி அமெரிக்காவில் உள்ள பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேறி உள்ள இந்தியர்கள், தெலுங்கர்களுக்காக ஜூன் 18 முதல் ஜூலை 9ம் தேதி வரை 8 நகரங்களில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணங்கள் நடைபெறும். வருகிற 18ம் தேதி சான்பிரான்சிஸ்கோ,  19ம் தேதி சியாட்டில், 25ம் தேதி டல்லாஸ், 26ம் தேதி செயின்ட் லூயிஸ், 30ம் தேதி சிகாகோவில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெறும்.

அதேபோல், ஜூலை 2ம் தேதி  நியூ ஆர்லியன்,   3ம் தேதி வாஷிங்டன் டிசி, 9ம் தேதி அட்லாண்டாவில் நடைபெறும். பல நாடுகளில் இருந்து  தங்கள் பகுதிகளில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணங்களை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளையும் பரிசீலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

25 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 67,949 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 39,837 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். இதில், ரூ.3.70 கோடி காணிக்கையாக கிடைத்தது. அறைகள் அனைத்தும் நிரம்பி வெளியே நீண்ட வரிசையில் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags : Tirupati Devasthanam ,United States , Srinivasa Tirukkalyanam, Tirupati Devasthanam,
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...