×

தேர்க்கன்குளத்தில் குடிநீர் தொட்டியில் அபாய நிலையில் ஏணி-சீரமைக்க வலியுறுத்தல்

சாத்தான்குளம் : தேர்க்கன்குளம் குடிநீர் தொட்டியில் அபாய  நிலையிலுள்ள ஏணியை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட தேர்க்கன்குளத்தில் மேலூர் மற்றும் கீழுரில் குடிநீர் விநியோகிக்கும் வகையில், 30 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த 2 தொட்டிகளிலும் அமைக்கப்பட்டுள்ள ஏணி, மிகவும் அபாய நிலையில் முறிந்து விழும் நிலையில்  காணப்படுகிறது.

இதனால் ஏணி வழியாக ஏறி தொட்டியில் தண்ணீர் இருப்பு அளவை தெரிந்து  கொள்ள முடியாமலும், தொட்டியின் மேல் எதுவும் பழுது பட்டாலும் சீரமைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் தொட்டியில் சுகாதாரத்துறையினர் ஏறி குளோரின்  தெளிக்கவும், தண்ணீர் தன்மை அறிய முடியாமல் சிரமம் ஏற்படுவதாக புகார்  தெரிவித்துள்ளனர். எனவே பஞ்சாயத்து மற்றும் யூனியன் அதிகாரிகள்  பார்வையிட்டு குடிநீர் தொட்டியில் பழுதடைந்துள்ள ஏணியை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Therkankulam , Sathankulam: The villagers have demanded to repair the dangerous ladder in the Therkkankulam drinking water tank.
× RELATED சாத்தான்குளம் அருகே பரபரப்பு; கல்...