×

ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிகிறது ஜூலை 18ல் ஜனாதிபதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

புதுடெல்லி தற்போதைய  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24ம் தேதி முடிவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 15ம் தொடங்குகிறது. அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜ ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தல் முடிந்த சில மாதங்களே முடிந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கான தேர்தல்கள் நடக்க உள்ளன. இவை முடிந்ததும் இந்தாண்டு இறுதியில் குஜராத், இமாச்சல பிரதேங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அடுத்தாண்டு தொடக்கத்தில் மேலும் பல மாநிலங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளன. இதனால், அடுத்த ஓராண்டுக்கு தேர்தல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவை முடிந்த கையோடு, 2024ல் மக்களவை தேர்தல் களை கட்ட உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ம் தேதி முடிகிறது.

அதற்கு முன் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. மக்களவை, மாநிலங்களவை எம்பி.க்களும், சட்டப்பேரவை எம்எல்ஏ.க்களும் வாக்களித்து, ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். வழக்கமாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட உள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே கசிய தொடங்கும். ஆனால், இந்த முறை அப்படிப்பட்ட பரபரப்பு ஏற்படவில்லை. அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதை ஆளும் பாஜ.வும், எதிர்க்கட்சிகளும் ரகசியமாக வைத்துள்ளன.

புரளி அடிப்படையில் மட்டுமே ஒரு சில தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இருப்பினும், அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தேர்வு செய்யக் கூடிய ஒருவரையே பாஜ வேட்பாளராக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், பாஜ.வுக்கு எதிரான தங்களின் ஒற்றுமையை வெளிகாட்டவும், 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக தங்களின் பலத்தை நிரூபிக்கவும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேட்பாளரை நிறுத்துவது பற்றி ஆலோசித்து வருகின்றன. பாஜ.வில் 75 வயதை கடந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவது இல்லை. இதனால், அடுத்த மாதம் 76 வயதை எட்டும் ராம்நாத் கோவிந்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம்தான்.

இதனால், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிடோரின் பெயர்களும் பாஜ.வின் பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

டெல்லி விக்யான் பவனில்  தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அளித்த பேட்டியில், தேர்தல் தேதியை அறிவித்தார். அவர் கூறுகையில், ‘ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்கும். வேட்பு மனு  தாக்கலுக்கு கடைசி நாள் ஜூன் 29. வேட்புமனுக்கள் ஜூன் 30ம் தேதி பரிசீலிக்கப்படம். மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2ம் தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி  தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் வெற்றி பெறும் ஜனாதிபதி, ஜூலை 25ம் தேதி பதவியேற்பார்,’ என்று அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் அட்டவணை (2022)
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள்    ஜூன் 15
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்    ஜூன் 29
வேட்புமனுக்கள் பரிசீலனை    ஜூன் 30
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்    ஜூலை 2
வாக்குப்பதிவு நடக்கும் நாள்    ஜூலை 18
வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாள்    ஜூலை 21
* ஜனாதிபதி ஒருமனதாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் வாக்குப்பதிவு நடக்காது.

* தமிழக தேர்தல் அதிகாரி
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக மாநில வாரியாக தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நியமித்துள்ளார். இதன்படி, தமிழகத்துக்கான தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Tags : Ramnath Govind ,Chief Election Commissioner , Ramnath Govind's term ends July 24 Presidential election on July 18: Chief Election Commissioner announces
× RELATED ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் 87...