திருவிக நகரில் 15 வயது சிறுமியுடன் திருமணம்: போக்சோவில் வாலிபர் கைது

பெரம்பூர்: திருவிக நகரில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவிக நகர் வெற்றி நகர் பகுதியை சேர்ந்த 55 வயது நபர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளுக்கு 15 வயது ஆகிறது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி காலை 8 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் சிறுமியை கண்டுபிடித்து தருமாறு திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் நண்பர்கள் சிலரிடம் விசாரணை செய்தனர்.

அதில் சிறுமி திருப்பத்தூர் மாவட்டம் நட்ரம்பள்ளி கிராமம் பகுதியைச் சேர்ந்த நந்தி(23) என்ற நபருடன் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று நந்தியின் பாட்டி வீட்டில் தங்கியிருந்த நந்தி மற்றும் சிறுமி ஆகிய இருவரையும் நேற்று காலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் காணாமல்போன சிறுமியும், நந்தியும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் கடந்த 6ம் தேதி திருமணம் செய்துகொண்டு அவரது பாட்டி வீட்டில் ஒன்றாக இருந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கை பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றி நந்தியை பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குப்பதிவு செய்து நந்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: