×

திருத்தணி அரசு மருத்துவமனையில் போதிய இருக்கைகள் இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி

திருத்தணி: திருத்தணி அரசு  பொது மருத்துவமனையில் இருக்கைகள் இல்லாததால் சிகிச்சை வந்த கர்ப்பிணிகள்  தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்று சென்றனர். எனவே அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருத்தணி ரயில் நிலையம் எதிரில் பழைய ஆலமரம் தெரு உள்ளது. இந்த தெருவில் அம்மா அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காய்ச்சல், தலைவலி, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகின்றன. அதற்காக மாதம்தோறும் இந்த மருத்துமனைக்கு கர்ப்பிணிகள் ஏராளமானோர் வந்து சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து கொள்கின்றனர். அதற்காக நேற்று நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் வந்தனர். ஆனால் அவர்களுக்கு அமர்வதற்கு இருக்கைகள் இல்லாமல் அனைவரும் தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்று சென்றனர். இதேபோல் திருத்தணி அரசு பொது மருத்துவமனையிலும் இதே நிலை நீடித்து வருகிறது. மேலும் பல உயர் சிகிச்சை பிரிவிலும் அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்விசிறி கூட இயங்குவதில்லை. கோடை வெயிலில் பெரிதும் நோயாளிகள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் கர்ப்பிணிகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக நோயாளிகளுக்கு இருக்கைகள் அமைத்து தரவேண்டும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Tiruthani Government Hospital , Pregnant women suffer due to lack of adequate seats in Trivandrum Government Hospital
× RELATED திருத்தணி புறவழிச்சாலையில்...