×

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு 150 கிலோ கஞ்சா கடத்தல் மூதாட்டி உள்ளிட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், மூதாட்டி உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள்  சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கடந்த 2017 ஜூலை 25ம் தேதி  காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சென்னையில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் அதிகாரிகள் வாகன சோதனையில் சிக்கிய காரை சோதித்தபோது  காரின் பின் பகுதியில் 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

 இதையடுத்து, அந்த காரையும்  அதிலிருந்த 150 கிலோ கஞ்சாவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த பாக்கியம் (60), திருமுருகன் (30),  பாலமுருகன் (27) ஆகிய மூவரை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 3 பேர் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 3 பேரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.  இந்த வழக்கு போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 1வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.பி.குமார்,  வழக்கறிஞர் ஏ.செல்லத்துரை ஆஜராகி வாதிட்டனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் பாக்கியம் உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாக்கியத்திற்கு ரூ2 லட்சமும், திருமுருகன், பாலமுருகன் ஆகியோருக்கு தலா ரூ1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.




Tags : Andhra Pradesh ,Tamil Nadu ,Chennai Special Court , Chennai Special Court sentences 3 to 10 years imprisonment each for smuggling 150 kg of cannabis from Andhra Pradesh to Tamil Nadu
× RELATED குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை...