×

குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போதை போலீஸ்காரர் கைது: ஆந்திராவில் அதிர்ச்சி

திருமலை: குடும்பத்தை மறந்து மதுபோதைக்கு அடிமையான போலீஸ்காரர் குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் பாக்கிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சேஷக்குமார் (22). பிரசாத் தற்போது பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேமித்து வைத்துள்ள குடோனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வீட்டில் சம்பள பணத்தை சரியாக தருவதில்லையாம். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு 10 மணிக்கு பிரசாத் வழக்கம்போல் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அந்த இடத்திற்கு சேஷக்குமார் சென்று, குடும்ப செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே ஏடிஎம் கார்டை தருமாறு கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பிரசாத், தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சேஷக்குமாரை நோக்கி சுட்டார்.

இதில் மார்பில் குண்டு பாய்ந்து சேஷக்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதற்கிடையில் சத்தம் கேட்டு பணியில் இருந்த சக போலீசார் விரைந்து வந்து சேஷக்குமாரை மீட்டு ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீசார், பிரசாத்திடம் விசாரணை நடத்தினர். மேலும் எஸ்.பி. சுமித்சுனில் ஆய்வு மேற்கொண்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை சுட்டுக்கொன்ற பிரசாத்தை கைது செய்தனர். மதுபோதைக்கு அடிமையாகி பெற்ற மகனை போலீஸ்காரரே சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போதை போலீஸ்காரர் கைது: ஆந்திராவில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thirumalai ,Prasad ,Ongol Pakya Nagar, Prakasam District, Andhra Pradesh ,
× RELATED தீப்பிடித்து எரிந்த சாலை: ஆந்திராவில் பரபரப்பு