ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 1 மாதம் அவகாசம் வேண்டும்: தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிவடைந்த நிலையில், அறிக்கை தாக்கல் செய்வதற்காக மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த 2017 செப்டம்பர் மாதம் முதல் உடனடியாக தனது விசாரணையைத் தொடங்கியது. இந்த ஆணையம் சார்பில் 120க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு அப்போலோ நிர்வாகம் சார்பில், டாக்டர்களை விசாரிக்கும்போது மருத்துவக்குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் அப்போலோ நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், இதை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெறாத நிலையில், ஆணையத்தின் காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரையின் படி 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு விசாரணையை மீண்டும் ஆணையம் தொடங்கியது.

இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அப்போலோ டாக்டர்களிடம் விசாரணை மேற்கொண்டு, இறுதி விசாரணையை கடந்த ஏப்ரல் 26ம் தேதி  ஆறுமுகசாமி ஆணையம் நிறைவு செய்தது. இந்த நிலையில் இதுவரை ஆணையம் சார்பில், 159 பேரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இது தொடர்பாக அறிக்கை தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 12வது முறை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் ஜூன் 24ம் தேதியுடன் முடிவடைவதால், 13வது முறையாக மேலும் 1 மாதம் கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிக்கை தயாராகி வரும் நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: