சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா நகரில் கூவம் கரையோரம் வசிப்பவர்களை மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை: அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முடிவு

சென்னை: சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா நகர் பகுதிகளில் கூவம் நதிக் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை மறுகுடியமர்வு செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 59வது வார்டுக்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா  நகர் பகுதியில் கூவம் நதிக் கரையோரம் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்ய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.    

இந்த கணக்கெடுப்பில் தகுதியுடைய 2,092 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு ஆணை பெறப்பட்டு 1,914 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு பெரும்பாக்கம் குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டனர். முதல்வரிடம், மீதமுள்ள 178 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்கள் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயே மறுகுடியமர்வு செய்யுமாறு கோரிக்கை அளித்தனர். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, 178 குடும்பங்களுக்கு கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள இந்த 178 குடும்பங்களை சுமூகமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியான கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 178 குடும்பங்களை உடனடியாக கே.பி.பார்க் குடியிருப்பு பகுதிக்கு மறுகுடியமர்வு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பொதுப்பணித்துறை, மின்துறை, சென்னை மாவட்ட வருவாய்த்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்து தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: