ராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பம் கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 20 ஹெக்டேர் வாழை மரங்கள் நாசம்

* வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு

* உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

வேலூர் : ராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 20 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாசமான வாழைமரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியதால், விவசாய பயிர்கள் சாய்ந்து நாசமானது. குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவிற்கு உட்பட்ட மேலகுப்பம் பகுதியில் சுமார் 20 ஹெக்டேரில் விவசாயிகள் வாழை பயிரிட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால், மேலகுப்பம் கிராமத்தில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து நாசமானது. இதனால் விவசாயிகளின் உழைப்பு வீணாகிப்போனது. எனவே நாசமான வாழைப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதற்கிடையே மேலகுப்பம் விஏஓ பலராமன், தோட்டகலைத்துறை அலுவலர் சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மேலகுப்பம் பகுதிக்கு சென்று பலத்த காற்றினால் சாய்ந்த வாழை மரங்களை ஆய்வு செய்தனர். ஆய்வு தொடர்பாக தாசில்தாருக்கு அறிக்கை அளித்து நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விஏஓ பலராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலகுப்பம் விவசாயி துரைராஜ் கூறுகையில், ‘திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் எனது நிலத்தில் பயிரிட்டிருந்த 750 வாழைமரங்கள் அடியோடு சாய்ந்து நாசமானது. எங்கள் கிராமத்தில் சுமார் 20 ஹெக்டேர் வாழை மரங்கள் நாசமாகியுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நாங்கள் கூட்டுறவு சங்கத்தில் செலுத்திய இன்சூரன்ஸ் பணம் சரிவர சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு சேரவில்லை என்று தெரிகிறது. இதனால் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்தும் பலனில்லாத நிலையாக உள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இன்சூரன்ஸ் முறையாக செலுத்துவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: