சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முத்தமிழ்ப் பேரவை 41ம் ஆண்டு இசைவிழாவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மா.சுப்பிரமணியம், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி, அமிர்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ராஜா அண்ணாமலையாரும், ஆர்.கே.சண்முகமும் சேர்ந்து உருவாக்கிய தமிழிசை இயக்கத்தை வரவேற்று பெரியார் பக்கம், பக்கமாக எழுதினார். வானொலி நிலையங்களுக்கு சென்று தமிழ்ப்பாடல்களைத் தான் அதிகம் ஒலிபரப்ப வேண்டும் என்று போராடிய இயக்கம் தான் திராவிட இயக்கம். இசையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும், நாடகமாக இருந்தாலும், நாட்டியமாக இருந்தாலும் அதனால் இனத்துக்கு, மொழிக்கு, நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நன்மை இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய இயக்கம் தான் திராவிட இயக்கம். இதை எல்லாம் சொல்வதால், நான் அரசியல் பேசுவதாக யாரும் கருதவேண்டாம். மக்களுக்காகக் கலைகள் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறேன்.
கலையில் மூடநம்பிக்கைகளை விதைக்கக் கூடாது. கலைகள் முற்போக்கு எண்ணம் கொண்டவையாக இருக்க வேண்டும். கலையின் மூலமாக மனிதனின் சிந்தனைக் கதவு திறக்கப்பட வேண்டும். கலைகள் மனதுக்கு இதமானதாக மட்டுமல்ல, மானுடத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும், கலையும் வளர வேண்டும், மக்களும் வளர வேண்டும், அத்தகைய கலையை வளர்க்கும் அமைப்பாக இருக்கக்கூடிய இந்த முத்தமிழ்ப் பேரவையை வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். பல நூறு ஆண்டு இந்த அமைப்பு செயல்பட்டு, தமிழ்க் கலைகளை வாழ்விக்க வரவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
