×

சென்னையிலிருந்து புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பல் மூலம் சுற்றுலா திட்டம்; தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து கோர்டிலியா என்ற சொகுசு கப்பல் பயணிகள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாட்டில் பல துறைமுகங்களில் சேவை வழங்கி வரும் கோர்டிலியா என்ற கப்பல் நிறுவனம் சென்னையிலும் கப்பல் சேவையை தொடங்கியது. சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று  திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்படுகிறது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி, விசாகப்பட்டினம் செல்லும் வகையில் சொகுசு கப்பல் பயணத் திட்டம் தொடங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்து இருந்தார்.

இதற்காக, சொகுசு கப்பல் சேவை தொடர்பான கருத்தரங்கு மும்பையில் நடைபெற்றபோது தனியார் கப்பல் நிறுவனமான கோர்டேலியா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்தியாவின் பெரிய சொகுசு கப்பல்களுள் ஒன்றான இந்த சொகுசு கப்பல் 11 தளங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்ப ரூ.22,915 முதல் ரூ.2,37,000 வரை கட்டணங்கள்  வசூலிக்கப்படும் என தெரிகிறது. உணவகங்கள், விளையாட்டு தளங்கள், கலை நிகழ்வுகளுக்கான அரங்கம் வசதிகளுடன் கப்பல் விருந்து, கொண்டாட்டங்கள்  மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள் நடத்துவதற்கும், அலுவலக ஆலோசனை கூட்டம் நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கப்பலுக்கான கட்டணத்தை தனியார் நிறுவனமே நிர்ணயிக்கிறது. இந்த கப்பலில் பயணம் செய்ய  ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்படவேண்டும். 2 நாள், 3 நாள், 4 நாள், 5  நாட்கள் என பயண திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி,  விசாகப்பட்டினத்திற்கு செல்கிறது. 4 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு ஆண்டுக்கு 4 முதல் 5 தடவை மட்டுமே சொகுசு கப்பல்  வரும் என்ற நிலையில், சென்னை துறைமுகத்திலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சொகுசு கப்பல் சேவை கோர்டேலியா கப்பல் ஜூன் 2ம் தேதி முதல் செப்டம்பர் 23ம்  தேதி வரை சுற்றுலா சேவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை  துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டம் மற்றும் சென்னை  துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி  சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா  திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. கோர்டேலியா என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை  தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துக்கிறது.  

சர்வதேச கப்பல்கள் சென்னை வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. சொகுசு கப்பல்கள் சென்னை  வரும்போது சுற்றுலா பயணிகள் சென்னையை ரசிப்பதற்கான சூழல் இருக்கும். தனியார் சொகுசு கப்பல் மூலம் நடைபெறவுள்ள சுற்றுலா திட்டத்திற்கு சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்கும்’ என்றார். இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து கோர்டிலியா என்ற சொகுசு கப்பல் பயணிகள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Tags : Chennai ,Puducherry ,Visakhapattinam ,Chief Minister ,Mukheri K. Stalin , Luxury cruise from Chennai to Pondicherry, Visakhapatnam; Chief Minister MK Stalin started!
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர்...