கேரளாவில் இப்போது பரவுவது ஒமிக்ரான்தான்; சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இப்போது பரவி வருவது ஒமிக்ரான் தொற்று என்றாலும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பின்னர் கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒரு சில மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரிக்கிறது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்பட மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் திருவனந்தபுரத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது: கேரளாவில் இப்போது பரவி வருவது ஒமிக்ரான் வகை தொற்றாகும்.

வேறு உருமாறிய வைரஸ் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுமக்கள் இதில் பெரிதும் அச்சப்படத் தேவையில்லை, என்றாலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். பொது இடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளி உட்பட நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். நோய் பரவல் குறைந்ததால் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் 2 டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: