திருவாடானை தொகுதியை குறி வைக்கிறார் ஓபிஎஸ்சின் 2வது மகனும் தேர்தலில் போட்டி: அதிமுக மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி

ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், தேர்தலில் போட்டியிட உள்ளது உறுதியாகி உள்ளது. திருவாடானை தொகுதியை குறி வைத்து அவர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக அரசியல் செய்து வரும் அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை காமராஜர் பேருந்து நிலைய நுழைவாயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை நிறுவப்பட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருவாடானை பசும்பொன் தேவர் அறக்கட்டளை சார்பில், தற்போது அந்த சிலை இருந்த இடத்தில் புதுப்பொலிவுடன் தேவரின் திருஉருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டு, நேற்று முன்தினம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், திருவாடானை தொகுதி முன்னாள் எம்எல்ஏக்கள் கேஆர்.ராமசாமி, நடிகர் கருணாஸ் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர், தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சமீபகாலமாக திருவாடானை தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ்சின் இளையமகன் ஜெயபிரதீப் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. தேவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அவர் வந்தபோது, அதிமுகவில் ஒரு பிரிவினர், அவருக்கு போட்டி போட்டு வரவேற்பு கொடுத்தனர். எனினும் மாவட்டத்தில் நீண்டகாலமாக அரசியல் செய்து வரும் அதிமுக முக்கிய நிர்வாகிகள், ஜெயபிரதீப்பின் இந்த நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஜெயபிரதீப், தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில் போட்டியிட இருந்ததாக கூறப்பட்டது. அதற்கான மறைமுக நடவடிக்கையும் நடந்து வந்தது. அம்மாவட்ட மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பால், கடைசி நேரத்தில் இந்த முடிவு கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘ஓபிஎஸ்சின் மூத்த மகன் ரவீந்திரநாத், ஏற்கனவே எம்.பியாக உள்ளார். தற்போது இளைய மகன் ஜெயபிரதீப்பையும், கட்சியில் முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர் கடந்த ஏப்ரல் மாதத்திலும் திருவாடானையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னரும் ரகசியமாக அவர் திருவாடானைக்கு வந்து, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்துள்ளார். கட்சிக்காக உழைத்து வரும் இந்த மாவட்டத்தை சேர்ந்த நீண்டகால நிர்வாகிகளை புறக்கணிக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பம்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: