×

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நிலுவையில் உள்ள 21 மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தர வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நேரம் நடைபெற்றது.

தமிழக கவர்னரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு  ஒப்புதல் வழங்கிட கவர்னரை முதல்வர் வலியுறுத்தினார்.  இந்த சந்திப்பின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு கவர்னருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  

அதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022 உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு கவர்னரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக கவர்னருடனான இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

* தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  (திருத்த) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு  உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022  உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகள் நிலுவையில் உள்ளன.
* இதற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல்  சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு  கவர்னரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Tags : MK Stalin ,Governor ,House ,Chennai , MK Stalin meets Governor at Governor's House, Chennai: Urge immediate approval for 21 pending bills
× RELATED மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு...