×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 443 இருளர் இன குடும்பத்துக்கு இலவச வீடு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் குண்டுகுளம் ஊராட்சி, வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சி, வாலாஜாபாத்  ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் இருளர் இன பழங்குடியின மக்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று நடந்தது. இதில்  குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி வைத்து வீடு கட்டுவதற்கான ஆணைகளை இருளர் இன மக்களிடம்  வழங்கினார்.

இதையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், ”பெரும்பாலான பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் அடிப்படை வசதிகளின்றி குளம், ஏரி, தாங்கல், வாய்க்கால், ஆறு அல்லது அவற்றின் கரையோரத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசால் ஆண்டுதோறும்  பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 443 இருளர் இன பழங்குடியினருக்கு வீடு கட்ட 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. 18.3.2022 அன்று நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. பின்தங்கிய இருளர் இன பழங்குடியின மக்களுக்கு குண்டுகுளம், சிங்காடிவாக்கம், ஊத்துக்காடு,  காட்ரம்பாக்கம்  மற்றும் மலையாங்குளம் ஆகிய 5 இடங்கள் கண்டறியப்பட்டு 443 இருளர் இன மக்களுக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து இலவச வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடி, தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா, வாலாஜாபாத் ஒன்றியக்குழு துணை தலைவர் சேகர் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags : Kanchipuram district ,Minister ,Thamo Anparasan , Dark Family, Free Housing, Minister Thamo Anparasan,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...