×

வடகிழக்கு, வட மாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களை குறி வைக்கும் பாஜ: ஐதராபாத்தில் அடுத்த மாதம்தேசிய நிர்வாகிகள் கூட்டம்

புதுடெல்லி, ஜூன் 2: வடகிழக்கு, வட மாநிலங்களில் வலுவாக காலூன்றி  உள்ள பாஜ, அடுத்ததாக தென் மாநிலங்கள் மீது கவனத்தை திசை திருப்பி உள்ளது. இதன் முதல் கட்டமாக தனது தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை ஐதராபாத்தில் அடுத்த மாதம் 2ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2014ல் ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்த பாஜ, அதன் பிறகு பல மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. வடகிழக்கிலும், வட மாநிலத்திலும் இக்கட்சி வலுவாக காலூன்றி உள்ளது. ஆனாலும், தென் மாநிலங்களில் அதனால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. கர்நாடகாவில் மட்டுமே பாஜ ஆட்சி நடக்கிறது. மற்றபடி, தமிழகம், கேரளாவில் படுதோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை ஐதராபாத்தில் அடுத்த மாதம் 2ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில்,  பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், பாஜ மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், பாஜ.வின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டம் தலைநகர் டெல்லிக்கு வெளியே நடத்தப்பட உள்ளது. தென் இந்தியாவில் 3வது முறையாக நடத்தப்படுகிறது. இதற்கு முன், கடந்த 2015ல் கர்நாடகாவின் பெங்களூருவிலும், 2016ல் கேரளாவின் கோழிக்கோட்டிலும் பாஜ தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் சந்திரசேகர ராவ், சமீப காலமாக பாஜ, காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜவின் முக்கிய ஆலோசனை கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP ,northeastern ,northern ,southern ,Hyderabad , BJP to target northeastern, northern states, southern states next month: National executives to meet next month in Hyderabad Northeast,
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...