×

மறைமலைநகர் அருகே நின்னகரை ஏரியில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு: சரணாலயம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு : மறைமலைநகர் அருகே நின்னகரை ஏரியில், வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், செங்கல்பட்டு பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சியின் மையப் பகுதியில், 118 ஏக்கர் பரப்பில் நின்னக்கரை ஏரி அமைந்துள்ளது. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, மறைமலைநகரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதில் இருந்து, நகராட்சி சார்பில், ஆழ்துளை மற்றும் திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த ஏரிக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் உட்பட ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்பபட பல நாடுகளில் இருந்து கூழைக்காடா உள்பட பலவிதமான பறவைகள் வருகின்றன. அவை, இனப்பெருக்கம் செய்து, மீண்டும் பல நாடுகளுக்கு செல்கின்றன.

தற்போது, வேடந்தாங்கலுக்கு அடுத்தபடியாக, இங்கு வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. நின்னக்கரை ஏரியில்  பறவைகளுக்கு போதுமான தண்ணீர்  இருந்தாலும், அவை அமர்ந்து இளைப்பாறவோ, இனப்பெருக்கம் செய்யவோ போதுமான மரங்கள் இல்லை. இதனால், பறவைகள் ஆபத்தான உயர்மின் அழுத்த கோபுரத்தில் மிக நெருக்கமாக அமர்ந்து இளைப்பாறுகின்றன. தற்போது 1000க்கும் மேற்பட்ட பறவைகள்  இந்த ஏரியில் தங்கியுள்ளன. நாளடைவில், மேலும் ஆயிரக்கணக்கான பறவைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.எனவே, இந்த ஏரி சுற்றுப்புறத்தில் இருந்து கழிவுநீர் கலந்து மாசடைந்து வருவதை தடுத்து, பறவைகள் இங்கு  சுதந்திரமாக அமர்ந்து இளைப்பாறி, இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையையும்,  பறவைகள் சரணாலயத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைத்து தரவேண்டும் என வன ஆர்வலர்கள் மற்றும்  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோழிக்கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு மறைமலைநகரில் உள்ள, 50க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து, கோழிக்கழிவுகள், ஏரியின் கரைகளில் கொட்டப்படுகின்றன. அதேபோல், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஏரியில் கலந்துவிடப்படுகிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், நிலத்தடி நீரும் விஷமாக மாறும் அபாயம் உள்ளது. இங்கு கொட்டப்படும் கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அருகில் வசிக்கும் மக்கள், கடும் அவதியடைகின்றனர். வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள், வேடிக்கை பார்த்து வருவதால், சாலை ஓரங்களிலும், நீர் நிலைகளிலும், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டுவது தொடர் கதையாக உள்ளது. எனவே, நீர் ஆதரங்களை பாதுகாக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும், ஏரி மற்றும் சாலைகளில், இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Ninnagar Lake ,Maraimalai Nagar , Increase in foreign bird visits to Ninnagar Lake near Maraimalai Nagar: Community activists demand setting up of sanctuary
× RELATED மறைமலைநகர் மாருதி சபா ஆலயத்தில் கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம்