பாஜவுக்கு எதிராக அதிமுக போராட வேண்டும்: முன்னாள் அமைச்சர் பொன்னையன் பரபரப்பு பேச்சு

சென்னை: நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது. இதை கண்டித்து நாம் போராட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார். கோஷ்டி பூசல்களால் அதிமுக தனது பலத்தை இழந்து வருவதை பயன்படுத்தி, பாஜ தாங்கள்தான் செல்வாக்கு மிக்க கட்சி என்பதை போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. கூட்டணியில் பாஜ இருந்தாலும் அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அதிமுக தலைவர்கள் தரப்பில் இருந்து எப்போதும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்ற ஆதங்கம் அதிமுகவினர் மத்தியில் இருந்து வருகிறது. அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாஜ செய்கிறதே என்கிற குமுறல் அதிமுகவிலேயே கேட்க முடிகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை, பொன்னையன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் பாஜவின் வளர்ச்சியால் அதிமுக எதிர்கொள்ளப்போகும் சவால்களை பற்றி விளக்கி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் பொன்னையன் பேசியதாவது: நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது. மாநில விவகாரங்களில் பாஜ இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறது. இதை கண்டித்து நாம் போராட வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டாம், கர்நாடகாவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என அம்மாநில பாஜ கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு பாஜ உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்கிறது. அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரசாரத்தை மறைமுகமாக பாஜ செய்து வருகிறது.

நாம் அனைவரும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டும். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜ குரல் எழுப்புவது கிடையாது. மக்கள் மத்தியில் இதை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இதை செய்திட வேண்டும். தமிழ்நாட்டில் பாஜ வளர்வது அதிமுகவுக்கு ஆபத்து, பாஜவின் இரட்டை நிலைப்பாட்டை மக்களுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி அம்பலப்

படுத்த வேண்டும். ஏனென்றால், தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தில் பாஜ இருப்பதாக நம்ப வைக்கப்பட்டு வருகிறது. இப்படியான முயற்சி அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல.

அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாஜ உட்கார நினைக்கிறது. அந்த கட்சி நம்முடைய கூட்டணியில் இருக்கிறது. இதனை பகிரங்கமாக பொதுவெளியில் பேசக் கூடிய சூழ்நிலை இல்லை. ஆனால் பாஜவின் உண்மை முகத்தை சமூக வலைதளங்களில் அதிமுகவினர் அம்பலப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும். அதுதான் அதிமுகவின் எதிர்காலத்துக்கும் நல்லது. இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தில் பாஜ இருப்பதாக நம்ப வைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: