×

யுபிஎஸ்சி தேர்வு முடிவு வெளியானது நாடு முழுவதும் 685 பேர் தேர்ச்சி: முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து சாதனை; தமிழகத்தில் 27 பேர் தேர்ச்சி; கோவையை சேர்ந்த பெண் முதலிடம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு முடிவுகள நேற்று வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் 685 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்து அசத்தியுள்ளனர். தமிழக அளவில் கோவை மாணவி முதல் இடம் பிடித்துள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2021ம் ஆண்டுக்கானது) 685 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. மார்ச் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இத்தேர்வுக்கு 10,93,984 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் சுமார் 5,08,619 பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடந்தது. தொடர்ந்து அக்டோபர் 29ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.
இத்தேர்வில் இந்தியா முழுவதும் 9,214 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஜனவரி 7, 8, 9, 15, 16ம் தேதிகளில் நடந்தது. தொடர்ந்து மார்ச் 17ம் தேதி மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் 1,824 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 26ம் தேதி நடந்தது. நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று பிற்பகலில் வெளியிட்டது.

இதில் அகில இந்திய அளவில் 685 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு  தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் ஸ்ருதி சர்மா முதலிடத்தையும், அன்கீட்டா அகர்வால் 2வது இடத்தையும், காமினி சிங்லா 3வது இடத்தையும், 4வது இடத்தை ஐஸ்வர்யா வர்மாவும் பிடித்து அசத்தியுள்ளனர். தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 42வது இடத்தை பிடித்துள்ளார். மொத்தத்தில் பொதுப்பிரிவில் 244 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் 73 பேரும், பிற்படுத்தப்பட்டவர்கள் 203 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: யுபிஎஸ்சி 2021ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 27 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 19 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். மேலும் இந்திய அளவில் 261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களில் 19 பேர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் முதல் இடத்தை கோவை மாணவி சுவாதி ஸ்ரீ பிடித்துள்ளார். இவர் எங்களிடம் பயிற்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களில், மதிப்பெண் விவரங்களை யுபிஎஸ்சி வெளியிடும். இதில் ரேங்க் அடிப்படையிலும், இடஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். யாருக்கு என்ன பதவி என்பது குறித்து ஒன்னரை மாதத்தில் அறிவிக்கப்படும். அதாவது ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.இவர்களுக்கு முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

* காத்திருப்போர் பட்டியல்
யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் 127 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொது பட்டியலில் தேர்வாகி பதவிகளை தேர்வு செய்யும் பட்சத்தில், காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். 80 பேர் இரண்டாவது இருப்பு  பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

* ஐஏஎஸ் அதிகாரியின் மகள் வெற்றி
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் டி.ஜெகநாதனின் மகள் சத்ரியா கவின் 244 ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தமிழக அரசின் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : UPSC ,Tamil Nadu ,Coimbatore , UPSC Exam Results Released 685 Nationwide Pass: Record for holding the top 4 places by women; 27 pass in Tamil Nadu; The woman from Coimbatore topped
× RELATED திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர்,...