×

அன்று பை நிறைய... இன்று கையளவு... விலைவாசி உயர்ந்தும் மாறாத பொருட்கள் விலை: நிறுவனங்களின் உத்தியில் மறைந்திருக்கும் சூட்சுமம்

அந்த 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கொடுங்க...’ பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிரொலிக்கும் குரல் இது. பல மாதங்களாக ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கி பழக்கப்பட்ட பலர், அதன் விலையை குறிப்பிட்டுதான் கேட்கின்றனர். அவர்களை பொறுத்தவரை, அன்றைய ஸ்நாக்ஸ் பட்ஜெட் 10 ரூபாயில் முடிந்து விட்டது என்பதில் சற்று நிம்மதி. பாக்கெட் சைஸ் அல்லது பிஸ்கட் எண்ணிக்கையை வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் கூர்ந்து கவனிப்பதே கிடையாது. பிஸ்கட் மட்டுமல்ல, ஸ்நாக்ஸ் பாக்கெட், குளிர்பானம், சோப்புக்கட்டி என பெரும்பாலானவை இதில் அடங்கும். வாடிக்கையாளர்களின் மனநிலையை நன்கு புரிந்து வைத்துள்ள நிறுவனங்களின் சூட்சுமம் இது.வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது நோக்கமல்ல, ஆனால், அந்த பண்டத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்தபோதும், பொருளின் விலையை உயர்த்தாமல் விற்பனையை அதிகரித்து, வாடிக்கையாளரை ஈர்க்கும் ஓர் உத்தி. அதாவது, பிஸ்கெட் எண்ணிக்கையில் ஒன்றிரண்டு குறைத்து விட்டு அல்லது ஸ்நாக்ஸ் பாக்கெட்டில் சிறிது கிராம் குறைத்து விட்டு அதே விலைக்கு விற்கின்றனர். சில சமயம் 25 சதவீத வரை அளவு குறைக்கப்பட்டு விடுகிறது.

உதாரணமாக, வடமாநிலங்களில் அதிகம் விற்பனையாகும் ஜீரக பானம் 200 மிலி-ல் இருந்து 160 மி.லி ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல், பெரிய நிறுவனங்களின் பிரபல குளிர்பானங்கள் 250 மிலி-ல் இருந்து 200 மி.லி ஆக குறைக்கப்பட்டு விட்டது. எப்போதும் மற்ற தயாரிப்புகளை விட மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் 10 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் ஒன்று, 140 கிராமில் இருந்து 110 கிராமாக குறைக்கப்பட்டுள்ளது.இதுபோல், பாத்திரம் தேய்க்கும் சோப் பார் 65 கிராமில் 60 கிராமாகவும், சோப்பு பவுடர் 115 கிராமில் இருந்து 110 கிராம் ஆகவும், மற்றொரு சோப்பு பவுடர் 150 கிராமில் இருந்து 140 கிராமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பிரபல நூடுல்ஸ் நிறுவனம், 100 கிராம் பாக்கெட்டை 70 கிராமாக குறைத்தபோதும், விலையை பாக்கெட்டுக்கு ₹2 உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு விலையை ஏற்றாமல் விற்கப்படும் அதே நேரத்தில், எடை அல்லது அளவு குறைப்பை வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் உணர்வதே இல்லை.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளி விவரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பண வீக்கம் 8.33 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பண வீக்கத்தை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை விட ஏறக்குறைய 2 மடங்கு அதிகம். இதுபோல், பண வீக்கத்தில் உணவுப்பொருள் பண வீக்கத்தின் பங்களிப்பு 46 சதவீதமாகவும், எரிபொருள் 7 சதவீதமாகவும், இதர முக்கிய பொருட்கள் 47 சதவீதமாகவும் உள்ளன என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு. இருப்பினும், ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள பண வீக்க விகிதம், அதன் விலைவாசியை குறிப்பிடும் முக்கிய குறியீடாக உள்ளது. உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு, அவற்றுக்கான மூலதன பொருட்களின் விலை குறிப்பாக, பாமாயில் விலை உயர்வு பிரதானமாக உள்ளது. இதுதவிர, கோதுமை மாவு, மைதா மாவு, முட்டை, பால் பொருட்கள் விலை உயர்வும், பேக்கேஜிங்கிற்கு பயன்படும் பேப்பர், டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்றவையும் காரணங்களாக கூறப்படுகின்றன.

பொருட்களின் எடை அல்லது அளவை குறைப்பதன் மூலம், இந்த நிறுவனங்கள் பண வீக்கத்தின் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் உணராத அளவுக்கு செய்து விடுகின்றன. இதுகுறித்து அதிகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை நிறுவன நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘இந்தியச்சந்தையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விலையைத்தான் பார்க்கிறார்கள். சற்று விலை உயர்ந்து விட்டால் கூட அந்த பொருளை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இவர்களை தக்க வைக்கவும், விலைவாசி உயர்வின் பாதிப்பை அவர்கள் உணராத வகையிலும் இத்தகைய உத்தி மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார். மொத்தத்தில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்விலும், மக்களின் வாங்கும் சக்தி குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்கிறது இந்த எடைக்குறைப்பு உத்தி. முன்பு பை நிறைய வாங்கியவர்கள், இன்று கையளவு மட்டுமே கிடைத்தாலும் நல்ல வேளை விலை உயரவில்லையே என்ற மன திருப்தியை அடைந்து விடுகின்றனர் என்பது மட்டும் நிச்சயம்.

சில்லறை விற்பனையில் சிறிய பாக்கெட்களின் பங்களிப்பு எவ்வளவு?
நுகர்வோர் பொருட்களின் சில்லறை விற்பனையில், சிறிய பாக்கெட்கள் அல்லது பேக்கேஜ்களில் பங்களிப்பு கணிசமான அளவுக்கு இருக்கிறது. உதாரணமாக, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்த தவலின்படி, அவர்களின் ஒட்டு மொத்த வர்த்தகத்தில் சிறிய பேக்கெட்கள் விற்பனை 30 சதவீதமாக உள்ளது. இதுபோல் சிறிய பேக்கேஜ்களின் பங்களிப்பு 50 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை உள்ளதாக பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல், நிறுவனங்கள் மற்றும் அவை தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ப இந்த பங்களிப்பு மாறுபடுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்த வர்த்தகத்தில் அவை மிக முக்கிய அளவாக உள்ளன என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

சரக்குகள் அனுப்பும் செலவும் குறைகிறது
அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பின் புள்ளி விவரத்தின்படி, விலையை ஏற்றாமல் பொருட்களின் அளவை குறைக்கும்போது, விற்பனைக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. அதேநேரத்தில், சரக்குகளை அனுப்புவதற்கான செலவுகளும் குறைகிறது. உதாரணமாக, எடைக்குறைப்பு செய்யப்படாத 10 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டை ஒரு அட்டைப்பெட்டியில் 60 தான் வைக்க முடியும். தற்போது அதே பிஸ்கெட் பாக்கெட் 30 கிராம் குறைக்கப்பட்டு அதே விலையில் விற்கப்படுகிறது. இதன்மூலம் அட்டைப்பெட்டியில் 100 பாக்கெட்களை வைத்து அனுப்புகின்றனர். இது நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து செலவையும் வெகுவாக குறைத்து விடுகிறது என கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் முதல் புது நடைமுறை கட்டாயமாகிறது
ஒன்றிய நுகர்வோர் விவகார அமைச்சகம், பண வீக்கம் குறித்து கடந்த மார்ச் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், நிறுவனங்கள் தாங்கள் பொருட்களின் பேக்கேஜ் விலை மட்டுமின்றி, அந்த பொருள் கிராமுக்கு அல்லது மில்லி லிட்டருக்கு, லிட்டருக்கு, கிலோவுக்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட வேண்டும். வரும் அக்டோபர் முதல் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. எனினும், சில நிறுவனங்கள் இப்போதே இந்த இந்த நடைமுறையை பின்பற்ற தொடங்கி விட்டன. இதன்மூலம், பொருட்களின் விலை உயர்ந்துள்ளதா என்பதை நுகர்வோர் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

உச்சத்தை எட்டிய பண வீக்கம்
நாட்டின் சில்லறை விலை பண வீக்கம் கடும் உச்சத்தை எட்டியுள்ளது. ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக புள்ளிவிவரப்படி, கடந்த மே 2014க்கு பிறகு பண வீக்கம் உச்ச அளவான 8.33 சதவீதத்தை  எட்டியுள்ளது. இதில் உணவுப்பொருள் பண வீக்கம் ஏப்ரலில் 8.38 சதவீதம். இது கடந்த மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 1.96 சதவீதமாகவும் இருந்தது. ரிசர்வ் வங்கி சில்லறை விலை பண வீக்கத்தை 6 சதவீதத்துக்குள் வைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், பண வீக்கம் அதையும் தாண்டி விட்டது.

எடைக்குறைப்பு முடிவு எப்படி எடுக்கப்படுகிறது?
ஆன்லைன் வர்த்தக அமைப்புகள் உட்பட பலவற்றுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்திய நுகர்வோர், விலை உயர்வை உன்னிப்பாக கவனிக்கக் கூடியவர்கள். இதனால்தான் பெரும்பாலான நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், விலையை உயர்த்தாமல் அளவை சற்று குறைக்கி்னறன. இது கவனிக்கக்கூடிய வகையில் இருக்காது. உதாரணமாக 50 கிராம் பேக் 40 கிராமாக குறைக்கப்படுமே தவிர 25 கிராம் ஆக்கப்பட மாட்டாது. பொதுவாக 20 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலையேற்றம் செய்யும் நிலை ஏற்பட்டு, அதற்கேற்ப விலை உயர்த்தினால் விற்பனையில் பெரிய பாதிப்பு இருப்பதில்லை. 20 ரூபாய்க்கு கீழ் விலை உயர்வு செய்யக்கூடிய சிறிய பாக்கெட்களுக்குதான் இந்த எடை அல்லது அளவு குறைப்பு உத்தி பின்பற்றப்படுகிறது’’ என்றார்.

4ம் காலாண்டில் விலை உயர்த்திய நிறுவனங்கள்
அகில இந்திய நுகர்வோர் பொருள் விநியோகஸ்தர்கள் அமைப்பின் தேசிய தலைவர் தைர்யாசில் பாட்டீல் கூறுகையில், ‘‘பிஸ்கெட் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் பேக்கேஜ் எடையை கணிசமாக குறைத்துள்ளன. எப்போது இந்த எடைக்குறைப்பு அமலுக்கு வந்தது என துல்லியமாக கூற இயலவில்லை. இருப்பினும், கடந்த நிதியாண்டின் 4ம் காலாண்டில்தான் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார். உதாரணமாக, ஹேர் ஆயில், டூத்பேஸ்ட், அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம், கடந்த நிதியாண்டின் 4ம் காலாண்டில் பொருட்களின் விலையை 5.7 சதவீதம் வரை உயர்த்தியதாக கூறியுள்ளது.

வியாபாரிகள் லாபம் குறைகிறது
வாடிக்கையாளர்களை ஈர்க்க மேற்கொள்ளப்படும் இத்தகைய உத்தியின் மூலம், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், முன்பு 10 ரூபாய் ஸ்நாக்ஸ் பாக்கெட் 10 உள்ள ஒரு ரோல் எங்களுக்கு முன்பு 80 ரூபாய்க்கு வழங்குவார்கள். தற்போது அளவு குறைக்கப்பட்ட நிலையிலும், அதனை ₹83 ஆக உயர்த்தி விட்டனர். எனவே, எங்களுக்கு லாபம் குறைந்து விடுகிறது, என்றனர்.

Tags : strategy
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து