×

சேலம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் வழியே சீறிவந்த காளைகளை தீரத்துடன் பிடித்த வீரர்கள்..!!

சேலம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிலவாரப்பட்டி மூலக்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துக் கொண்டனர். வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து பிடிக்கி அடக்கினர். அதேபோல் வீரர்களிடம் பிடிபடாமல் மல்லுக்கட்டிய காளைகள் மிரட்டியபடி பாய்ந்தோடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மாடுபிடி வீரர்களிடம் இருந்து தப்பித்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், திமிலை பிடித்து அடக்கிய காளையர்களுக்கும் தங்க நாணயம், பட்டுச் சேலை, செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதேபோல் அரியலூர் மாவட்டம் தாப்பலூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. இதில் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர் மதுரை, சேலம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் பகுதிகளை சேர்ந்த 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று களமாடினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பட்டுச்சேலை, மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.


Tags : Jallikattu Competition ,Salem ,Vadivasal , Salem, Jallikkattu competition, Vadivasal, bull, players
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...