×

மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு

திருச்சி: மதுரை மாவட்டம், தல்லாகுளம் பகுதியில் 22 வயது உடைய ரூபாலி என்ற பெண் யானை பீகாரில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கி வரப்பட்டு வளர்க்கப்படுவதால் தொடர்ந்து மதுரை மாவட்ட வன துறைக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிர் காப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் யானையை பறிமுதல் செய்து, திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை மருத்துவர்கள், காவல்துறையினர் குழுவாக சேர்ந்து யானையை பறிமுதல் செய்ய முயன்றபோது, யானையின் உரிமையாளர் யானையை பறிமுதல் செய்யவிடாமல் வனத்துறை அதிகாரி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் யானையின் பாதுகாவலர் திடீரென தலைமறைவானார். யானையை லாரியில் ஏற்றுவதற்கு பாகன் இல்லாமல் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக வனத்துறையினர் போராடி வந்தனர். இந்த நிலையில் மாற்று பாகனை ஏற்பாடு செய்த வனத்துறை அதிகாரிகள், 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு யானையை லாரியில் ஏற்றினர்.

பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் சட்டவிரோதமாக வைத்திருந்த யானையை வனத்துறை அதிகாரிகள் விடிய விடிய போராடி மீட்ட சம்பவம் மதுரையில் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு  மையத்தில் ஏற்கெனவே மலாத்தி, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமிலா , இந்து , ரோகினி , இந்திரா என்ற  யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ரூபாலி யானை வந்துள்ளதால் மொத்தம் 9 யானைகளை திருச்சி மாவட்ட வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

Tags : Madurai ,Fighting Recovery Forestry Department ,Trichy Elephants Rehabilitation Center , Madurai, Document, Elephant, Recovered Forest Department
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை