×

ஜிஎஸ்டியில் பதிவு பெறாதவர்களுக்கு ₹50 லட்சத்திற்கு பொருட்கள் அனுப்பும் வணிகர்கள் ஒரு சதவீதம் வரி செலுத்தாவிடில் நடவடிக்கை: ஆணையர் பணீந்திரரெட்டி எச்சரிக்கை

சென்னை: 50 லட்சத்துக்கு மேல்  ஜிஎஸ்டி வரி விதிப்பில் அல்லாதோர் அல்லது ஜிஎஸ்டியில் பதிவு  பெறாதவர்களுக்கு அனுப்பும் வணிகர்கள் 1 சதவீதம் வரி  செலுத்தாவிடில்  சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் பணீந்திர ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:சரக்குகள் மற்றும் சேவைகள் விதிகள் 2017ல் மேற்கொள்ளப்பட்ட 14வது திருத்தத்தின்படி  86-8 என்னும் புதிய விதி 1.1.2021 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, வணிகர்கள் ஒரு மாதத்தில் தான் செலுத்தவேண்டிய வரியில் 99 சதவீதம் மட்டுமே உள்ளீட்டு வரியை ஈடு செய்து செலுத்தலாம். மீதமுள்ள 1 சதவீதம் வரியை, மின்னணு பணப்பதிவேட்டின் மூலமாக மட்டுமே செலுத்த இயலும். ஒரு மாதத்திற்கான வெளி வழங்குகை தொகை ₹50 லட்சத்திற்கு மேல் இருக்கும் வணிகர்களுக்கு இக்கட்டுப்பாடு பொருந்தும். ஆனால் இக்கட்டுப்பாடு கீழ்க்கண்ட வணிகர்களுக்கு பொருந்தாது.

* வருமானவரிச் சட்டம் 1961ன் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் ஆண்டிற்கு ₹1 லட்சத்திற்கு மேல் வருமான வரி செலுத்திய வணிகர்கள்.
* சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகள் சட்டம் 2017ன் கீழ் கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி திருப்புத் தொகை பிரிவு 54 (3)ன் படி உள்ளீட்டு வரியைவிட வெளிவழங்குகை வரி குறைவாக இருத்தல் (பிரிவு 54(3) (ii) காரணங்களுக்காக பயன்படுத்தப்படாத உள்ளீட்டுவரியை திருப்புத்தொகை பெற்ற வணிகர்கள்.
* நடப்பு நிதியாண்டின் நடப்பு மாதம் வரை செலுத்த வேண்டிய மொத்த வரித்தொகையில் 1 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொகையை மின்னணு பணப்பதிவேட்டின் மூலமாக செலுத்திய வணிகர்கள்.
* மேலும், அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகளுக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தாது.
எனவே, மேற்படி விலக்களிக்கப்பட்ட வணிகர்கள் தவிர்த்து, மற்ற வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் வரி செலுத்தும் முன் ₹50 லட்சம் பரிசோதிக்க வேண்டும். தன்னுடைய வெளிவழங்குகை தொகை ₹50 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அம்மாதம் செலுத்த வேண்டிய வரியில் 1 சதவீதத்தில் வரியை மின்னணு பணப்பதிவேட்டின் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தவறினால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம் 2017ன் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தால் 5 ஆண்டு சிறை
சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்குதல் சம்பந்தப்பட்ட எவ்வித  பரிவர்த்தனையிலும் ஈடுபடாமல் வெறும் விலைப்பட்டியல்களை மட்டுமே வழங்கும்  போலிப்பட்டியல் வணிகர்கள் அரசின் வரி வருவாயில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தி வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை   எடுக்கப்படும். போலி பட்டியல் வழங்கும் குற்றத்தில் ஈடுபட்டதற்காக ₹10  ஆயிரம் அல்லது வரி ஏய்ப்பு செய்ததற்கு இணையான தொகை இதில், எது அதிகமோ, அது  அபராதமாக வசூலிக்கப்படும். மேலும், பிரிவு 132ன் கீழ் வழக்குப்பதிவு செய்து  குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு வரி ஏய்ப்புச் செய்த தொகைக்கு ஏற்றவாறு,  வரி ஏய்ப்புத் தொகை ₹5 கோடியை மிகும் பட்சத்தில் அபராதத்துடன் 5 ஆண்டுகள்  வரையிலான சிறை தண்டனையும், ₹2 கோடிக்கு அதிகமாகவும், ₹5 கோடிக்கு  உட்பட்டு இருக்கும் பட்சத்தில்,  அபராதத்துடன் கூடிய 3 ஆண்டுகள் வரையிலான  சிறைத் தண்டனையும், வரி ஏய்ப்புத் தொகை ₹1 கோடிக்கு அதிகமாகவும், ₹2  கோடிக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் அபராதத்தோடு ஓர் ஆண்டு வரையிலான  சிறைத் தண்டனையும் பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  போலி  வணிகத்தில் ஈடுபடும் அனைவர் மீதும் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படும்  என ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு நேரடி ஆய்வு செய்ய இணை ஆணையருக்கு அதிகாரம்
 வணிகர்களின் பரிவர்த்தனை உண்மை நிலை அறிய, வரி ஏய்ப்பு இருப்பின் அதனை அளவிட ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதுவரை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர்கள் ஆய்வு மேற்கொள்ள ஆணையர் ஒப்புதல் வேண்டும். தற்போது, சம்பந்தப்பட்ட நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர்களுக்கு, தங்கள் கோட்டத்தை சார்ந்த வணிகர்களின் வணிக இடங்களை ஆணையரின் ஒப்புதல் இன்றி ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.



Tags : Commissioner ,Panindra Reddy , Will send goods worth ₹ 50 lakh to those not registered for GST Action if traders do not pay one per cent tax: Commissioner Panindra Reddy warns
× RELATED சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட...