×

ரூ.65 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த வழக்கில் திருப்போரூர் முன்னாள் சார்பதிவாளர் கைது: போலீசார் விசாரணை

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் பிரபலமான கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலம் உள்ளது. இந்த சொத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் 1971ம் ஆண்டு தென்சென்னை மாவட்ட சார்பதிவகத்தில் வைத்து கிரயம் பெற்றுள்ளது. அந்த நிறுவனமும் தங்களுக்கு சொந்தமான மற்ற நிலங்களோடு சேர்த்து இந்த நிலத்திற்கும் மதிற்சுவர் அமைத்து வருவாய்த்துறை சார்பில் அந்த நிறுவனத்தின் பெயரிலும், இயக்குனர்கள் பெயரிலும் பட்டாவும் பெற்றுள்ளனர். இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க நினைத்த கும்பல்.

1971ம் ஆண்டு மதுராந்தகத்தை சேர்ந்த மதுரை என்பவர் கிரயம் பெற்றது போல் போலிஆவணம் தயார் செய்து அந்த ஆவணம் மதுராந்தகத்தில் ஆட்டோவில் செல்லும்போது தொலைந்து விட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து சான்று பெற்றுள்ளனர். அதை வைத்து திருப்போரூர் சார்பதிவகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த காசி (60) மூலமாக போலி ஆவணங்களை தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகம் கொடுத்தது போன்று நகல் ஆவணம் பெற்றுள்ளனர். இந்த ஆவணத்தை வைத்து, 2020  டிசம்பர் மாதம் மதுராந்தகத்தை சேர்ந்த மதுரை தனது மகன் ரஞ்சித்குமாருக்கு குடும்ப தான செட்டில்மெண்ட் கொடுப்பது போல் ஆவணம் தயார் செய்தார்.  திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுக்கு கொடுத்துள்ளனர். இந்த ஆவணத்தை அப்போது சார்பதிவாளராக இருந்த செல்வசுந்தரி பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், போலியாக ஆவணம் தயார் செய்த கும்பல் மதிற்சுவர் போடப்பட்ட நிலத்தின் உள்ளே நுழைந்து அபகரிக்க முயற்சி செய்தது. அப்போது, உண்மையான உரிமையாளரான பிரபல கிரானைட் கம்பெனி அதிபர்கள் தங்களது நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதை தெரிய வந்து. இதுபற்றி தாம்பரம் பெருநகர காவல் ஆணையகரத்தில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து, திருப்போரூர் சார்பதிவகத்தில் கடந்த ஒரு வாரமாக விசாரணை நடத்தியது. இதில், அலுவலக தற்காலிக ஊழியர் காசி உதவியோடு சார்பதிவாளர் செல்வசுந்தரி இந்த முறைகேட்டிற்கு துணை போனதும் தெரிய வந்தது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி தாம்பரம் மாநகர தனிப்படை போலீசார் தற்காலிக ஊழியர் காசி, அவரது மருமகன் பிரபாகரன், போலி ஆவணம் எழுதிக்கொண்ட ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில்,  போலி ஆவணத்தை பதிவு செய்த சார்பதிவாளர் செல்வசுந்தரி ஏற்கனவே லஞ்ச வழக்கு ஒன்றில் கைதாகி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். நேற்று மாலை சென்னைப் புறநகரில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது, செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruporur , Former Thiruporur associate arrested in Rs 65 crore land grab case: Police probe
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...