பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார்.இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை எல்சா ஜாக்குமோவுடன் (19 வயது, 215வது ரேங்க்) நேற்று மோதிய கெர்பர் (34 வயது, 17வது ரேங்க்) 6-1, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 2 மணி, 4 நிமிடத்துக்கு நீடித்தது.
மற்றொரு 2வது சுற்றில் இங்கிலாந்தின் இளம் நட்சத்திரம் எம்மா ரடுகானு (19 வயது, 12வது ரேங்க்) 6-3, 1-6, 1-6 என்ற செட் கணக்கில் பெலாரசின் அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இந்த போட்டியும் 2 மணி, 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.முன்னணி வீராங்கனைகள் கரோலினா முச்சோவா (செக்.), கோகோ காஃப் (அமெரிக்கா), விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), அமெண்டா அனிசிமோவா (அமெரிக்கா), ஜில் தெய்க்மன் (சுவிஸ்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.