×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.5.2022), சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6.5.2022 அன்று தனது சமூக வலைதளத்தில் வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்! கடுமையான நெருக்கடிகளின் போது தான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என்று பதிவிட்டிருந்தார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வரும் மாணவி சிந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோழியுடன் விளையாடும்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து இரண்டு கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் மாணவி சிந்துவின் முகத்தின் தாடை மற்றும் பற்கள் உடைந்தது. இந்நிலையில் இம்மாணவிக்கு சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும் தொடர்ந்து மாணவி சிந்து தன்னம்பிக்கையுடன் படித்து +2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு அவரது தந்தை தேர்வு மையத்திற்குத் தூக்கிச் சென்ற செய்தியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது கவனத்திற்குச் சென்ற பிறகு தேர்வு எழுத 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர் தேர்வு எழுதி முடித்த பிறகு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (25.5.2022) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும்  சிந்துவின் தந்தை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேநீர் கடை நடத்துவதற்கான அனுமதி ஆணையை வழங்கினார். இந்நிகழ்வின்போது மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
திரு. கே.ஆர். பெரியகருப்பன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.உடன் இருந்தனர்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Sindhu , Tamil Nadu Chief Minister MK Stalin met Sindhu, a student who is receiving treatment at the hospital, and inquired about his health.
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...