பட்டுக்கோட்டை அருகே ருசிகர சம்பவம் சிறப்பு வகுப்பில் விடுப்பு எடுக்காமல் வருகை தந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து-கணித ஆசிரியர் கவனிப்பு

பட்டுக்கோட்டை : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆசிரியர் நாடிமுத்து(54). இவர் கடந்த 17 ஆண்டுகளாக இதே அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நேரங்களின்போதும் ஆசிரியர் நாடிமுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக டீ, பிஸ்கட் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 10ம் வகுப்பில் அனைத்து சிறப்பு வகுப்புகளுக்கும் விடுப்பு எடுக்காமல் வருகைபுரிந்து பயிற்சி பெற்றதால் மாணவர்களை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் கணித ஆசிரியர் நாடிமுத்து 10ம் வகுப்பு பயின்று வரக்கூடிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் நேற்று முட்டையுடன் கூடிய பிரியாணி விருந்து வைத்தார். இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பலவிதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேரும்போது 7.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதால் மாணவர்கள் அனைவரும் இதே அரசு பள்ளியில் தங்களது மேல்நிலைக் கல்வியை தொடர வேண்டும் என்றும் ஆசிரியர் நாடிமுத்து மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பிரியாணி வழங்கிய ஆசிரியர் நாடிமுத்துவை பள்ளியின் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

இது குறித்து இப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி தீபிகா உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கூறுகையில், அனைத்து சிறப்பு வகுப்புகளுக்கும் விடுப்பு எடுக்காமல் வந்து பயிற்சி பெற்றதால் எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக கணித ஆசிரியர் எங்களுக்கு முட்டையுடன் பிரியாணி வழங்கியுள்ளார். ஆசிரியரை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள் அனைவரும் நடந்து முடிந்த மற்றும் நடைபெற உள்ள தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியருக்கு பெருமை சேர்ப்போம். அதோடு மட்டுமல்லாமல் இதே அரசு பள்ளியில் எங்களது மேல்நிலைக்கல்வியை (11, 12ம் வகுப்பு) தொடர்வோம் என்று உறுதியளித்தனர்.

சிறப்பு வகுப்புகளுக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர் பிரியாணி வழங்கியதும், ஆசிரியரை பெருமைப்படுத்தும் விதமாக நல்ல மதிப்பெண்கள் பெறுவோம் என்று மாணவர்கள் உறுதியளித்ததும் பட்டுக்கோட்டை அருகே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவதும், குறிப்பாக 10ம் வகுப்பில் கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: