அரிசி, மண்ணெண்ணை கடத்தல் தடுப்பால் ரூ.2,630 கோடி சேமிப்பு; அமைச்சர் சக்கரபாணி தகவல்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உணவு பொருள் விநியோகம் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை ரீதியிலான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழகத்தில் இதுவரையில் 35.35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. புதியதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாளில் ரேஷன் அட்டை வழங்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இதுவரையில் 11.47 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டறிந்து நீக்கப்பட்டுள்ளது. 12 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரிசி, மண்ணெண்ணெய் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலமாக ரூ.2,630 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து வெளியே வரும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை சோதனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அரிசியை 5 முதல் 20 கிலோ பைகளில் வழங்கவும், பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை பொட்டலமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயோ மெட்ரிக் முறைக்கு மாற்றாக கண் விழிரேகை மூலமாக பொருள் வழங்கிட தேர்வு செய்யப்பட்ட மாவட்டத்தில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளோம். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: