×

வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆற்றில்; படுக்கை அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பாசன விவசாயிகள் வலியுறுத்தல்

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் சுமார் ஆயிரம் ஹெக்டேர் பயன்பெறும் வகையில் குடமுருட்டி ஆற்றில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய படுக்கை அணை கட்டும் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான குடமுருட்டி ஆறு மூலம் பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆற்றில் இரவு பகலாக கடந்த சில ஆண்டுகளாக மணல் அள்ளப்பட்டதாலும், ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகள் அகற்றப்பட்டதாலும் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால் மட்டுமே பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இதே நிலைமை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதிக்கு உட்பட்ட பூண்டி வாய்க்கால், சந்தன வாய்க்கால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட தில்லையம்பூர் வாய்க்கால் ஆகியவற்றிற்கு ஏற்பட்டது.

அதனை அடுத்து வாய்க்கால்களின் தலைப்பிற்கு அருகே குடமுருட்டி ஆற்றில் படுக்கை அணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் அதன் தலைப்பு பகுதி அருகே குடமுருட்டி ஆற்றில் சந்திரசேகரபுரம் பகுதியில் படுக்கை அணை கட்டப்பட்டது. இருப்பினும் இந்த அணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய காலத்திலேயே தனது ஆயுளை முடித்துக் கொண்டது. இதனால் சுமார் ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகளின் கோரிக்கை தினகரனில் படத்துடன் செய்தியாக வெளியானது. அதனை அடுத்து சில லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தற்காலிகமாக மரம் மற்றும் மணல் மூட்டைகள், கற்கள் ஆகியவைகளை கொண்டு அடைக்கப்பட்டது. இருப்பினும் இது உரிய பலனை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி தரவில்லை.

இதனால் பொதுப்பணித்துறைக்கு வருவாய் இழப்பும் விவசாயிகளுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா தில்லையம்பூர் விவசாயிகள் மற்றும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சந்தனம்வாய்க்கால் பாசன விவசாயிகள் ஆகியோர் குடமுருட்டி ஆற்றில் மீண்டும் தரமான படுக்கை அணை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து அதற்கான மதிப்பீடுகள் பொதுப்பணித் துறையின்மூலம் சுமார் 3 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு பணிகள் கடந்த மாத இறுதியில் துவக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள் தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். புதிய படுக்கை அணை கட்டும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஜூன் மாதம் 12ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட இருப்பதால் படுக்கை அணை கட்டும் பணியை மேலும் மேலும் துரிதப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kudamuruti River ,Valankaiman ,Bed Dam , In the Kudamurutty River near Valangaiman; Bed dam construction should be completed soon: Irrigation farmers insist
× RELATED வலங்கைமான் அடுத்த இனாம்கிளியூரில்...