வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி: போர் நினைவு சதுக்கத்தில் முதல்வர் அஞ்சலி

சென்னை: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மாலையில் சாலை மார்க்கமாக ஊட்டியில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்தார். அங்கு போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டண்ட் மோகன் மற்றும் எம்ஆர்சி கமாண்டன்ட் யாதவ் உடனிருந்தனர். பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் வருகை பதிவேட்டில் ‘‘தேசத்தின் தீரம் மிகுந்த வீரர்களுக்கு என் சல்யூட் மற்றும் அஞ்சலி’’ என ஆங்கிலத்தில் எழுதி கையொப்பமிட்டார். தொடர்ந்து ராணுவ பயிற்சி கல்லூரியில் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கால ராணுவ புகைப்படங்களை பார்வையிட்டார்.

அந்த கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊழியர்கள் தமிழக முதல்வருடன் போட்டோ எடுத்து கொண்டனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு...: வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் ஒருவர் சென்றுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை, ராணுவ பயிற்சி கல்லூரி தலைவர் லெப்டின்ட் ஜெனரல் மோகன் ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்று காண்பித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: