நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றம் சிமென்ட் சாலை இடிந்து விழுந்தது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடல் சீற்றத்தால் ஏற்பட்ட மணல் அரிப்பில், சிமென்ட் சாலை இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் 250க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள, அனைவரும் மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். மேலும், நெம்மேலி குப்பத்தின் அருகே சூளேரிக்காடு இசிஆர் சாலையொட்டி கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடலில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டன. இதையொட்டி, கடல் அலையை, தடுக்க கடலில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு பெரிய கற்கள் கொட்டப்பட்டன. இதனால், கடல் சீற்றத்தின்போது, அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தில் கடல் அலை அதிகமாக தாக்கி வருகிறது.

மேலும், அங்கு கடல் அலையின் வேகம் அதிகரித்து கடல் 50 அடி தூரத்திற்கு முன்னோக்கி வந்து கடல்நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள மீனவர்கள், தங்களது படகுகளை நிறுத்த இடமில்லாமல் மனவேதனையில் உள்ளனர்.  இந்த வேளையில், மாமல்லபுரம் சுற்றுப்புற மீனவ குப்பங்களில் 10 நாட்களுக்கு மேலாக பலத்த கடல் சீற்றம் காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் நெம்மேலி மீனவர் குப்பத்தில் கடற்கரையை ஒட்டி வெங்கட்டம்மன் கோயில் அருகே உள்ள சிமென்ட் சாலை, கடல் அரிப்பு காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில், ‘தமிழக அரசும், மீன்வளத் துறை அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டு, மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டும்’ என்றனர்.

மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே ராட்சத அலை, கரைப்பகுதியை நோக்கி 100 மீட்டர் தூரத்துக்கு முன்னோக்கி வந்து தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், கடற்கரையில் தற்காலிகமாக இருந்த பெட்டி கடைகள், தண்ணீரில் தத்தளித்தன. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அங்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தகவலறிந்து பேரூராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் ஏற்படுத்தி, கரையோரத்தில் தேங்கிய தண்ணீரை மீண்டும் கடலுக்கு விட்டனர்.

Related Stories: