×

கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மாநில அரசின் வலிமையை உணர்த்தும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மாநில உரிமைகளின் வலிமையை உணர்த்தும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அமைந்துள்ளன. வரலாற்றிலேயே இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. வரி விதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரையில் நேற்று அளித்த பேட்டி:
 
ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்ற தீர்ப்பின் வழியாக உச்சநீதிமன்றம் அரசமைப்பு உரிமைகளை தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய முக்கிய அம்சம் ஒன்றுள்ளது.
 
பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்து வந்துள்ளன. அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை தீர்ப்புகள் உணர்த்தியுள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு ஏற்கனவே சட்டமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக் காட்டி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் புதிய அம்சம் எதுவும் இல்லை. அதில், கவனிக்க வேண்டியதே மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது தான். வரலாற்றில் இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக, கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைத்துள்ளோம். அதே அம்சத்தை தான் தீர்ப்பும் உணர்த்துகிறது.

மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகள் அமைந்துள்ளன. ஜனநாயகத்தில் மக்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் உள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே மொத்தத்தில் பிழையாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டுள்ளது. திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Supreme Court ,PDR ,Palanivel Thiagarajan , Supreme Court judgments that show the strength of the state government to those who want to destroy the federal philosophy: Interview with PDR Palanivel Thiagarajan
× RELATED மன்னர்களைவிட மோசமான ஆட்சி நடந்து...