×

வங்கி கணக்கு மூலம் நேரடியாக கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை

சென்னை: கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் அவர்களது வங்கி கணக்கில் ஆணையர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக வழங்கப்படும் என்று ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் 2 லட்சம் கிராம கோயில்கள் உள்ளன. இவற்றை அந்தந்த கோயில்களின் பூசாரிகளே பராமரித்து வருகின்றனர். இவர்களின் நலன்கருதி அறநிலையத்துறையில் கிராம கோயில் பூசாரிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பூசாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு கிராம கோயில்களின் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து 60 வயதை கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு வாரியத்தின் மூலம் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 3281 பேர் பயனடைந்து வந்தனர்.  இந்நிலையில், பூசாரிகளின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை வைத்தது. அதன்பேரில், கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, புதிதாக கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்களை உறுப்பினராக சேர்க்கும் வகையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.  கூட்டத்தில் ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் சுதர்சன், கோயில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 147 பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு ஓய்வூதிய ஆணை கடிதம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

கூட்டத்தில், மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து பூசாரிகளுக்கு காலதாமதமாக 2 மாதத்துக்கு ஒருமுறை ஓய்வூதியம் வருகிறது. எனவே, ஆணையர் அலுவலகத்தில் இருந்து பூசாரிகள் வங்கி கணக்கில் நேரடியாக ஓய்வூதியத்தை அனுப்ப கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையையேற்று பூசாரிகள் ஓய்வூதியம் அவர்களது வங்கி கணக்கில் ஆணையர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக வழங்கப்படும் என்று ஆணையர் குமரகுருபரன் உறுதியளித்தார்.

Tags : Kumarakuruparan , Bank Account, Village Temple Priest, Pension, Commissioner Kumarakuruparan
× RELATED கோயிலுக்கு கிடைக்கும் வருவாய்...