×

மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் மழை திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

களக்காடு: திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் சாரல் மழையால் வனப்பகுதியில் உள்ள நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை வெயில் கொளுத்தி வந்தது. வெயிலின் தாக்கத்தால் கடும் வெப்பம் நிலவியது. ஊர் பகுதியிலும் அனல் காற்று வீசியது. இதையடுத்து திருக்குறுங்குடி பெரியகுளம், நம்பியாறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையிலும், ஊர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வனப்பகுதியில் உள்ள நம்பியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

மழை தொடர்வதால் நம்பியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து நம்பியாற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளம் தணிந்ததும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதேபோல் களக்காடு பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. கோடை மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Saral ,Tirakkurungudi , Heavy rain in the Western Ghats Thirukurungudi river floods: Tourists banned from bathing
× RELATED சோழவந்தான் அருகே பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கல்