31 ஆண்டுகால வலி குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை எனது விடுதலைக்காக போராடிய தாயின் தியாகம் மிகப்பெரியது: ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் உருக்கம்

ஜோலார்பேட்டை: எனது விடுதலைக்காக போராடிய தாயின் தியாகம் மிக பெரியது, 31 ஆண்டுகால வலி குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை  என ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் தனது வீட்டில் இருந்த பேரறிவாளனுக்கு அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் ஆகியோர் ஆனந்த கண்ணீருடன் இனிப்பு ஊட்டினர். மேலும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜோலார்பேட்டையில் குவிந்தனர். அனைவரும் பேரறிவாளனுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்ந்து, பேரறிவாளன் அளித்த பேட்டி: நல்லவர்கள் வாழ வேண்டும், கெட்டவர்கள் வீழ வேண்டும். இதுதான் இயற்கை நியதி. இதை தான் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். 31 ஆண்டுகாலம் எனது வாழ்க்கை சிறையிலேயே கழிந்துவிட்டது. நான் விடுதலையாக தமிழக மக்கள் மட்டுமின்றி, உலக தமிழர்கள் அனைவரும் விரும்பினார்கள். தமிழக மக்கள் தங்களது வீட்டு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். அதற்கு நன்றி.எனது விடுதலைக்காக போராடிய எனது தாயின்  தியாகம் மிகப் பெரியது. எனது தாய் எனது ஆரம்ப காலக்கட்ட சிறைவாசத்தின்போது, அதிக அவமானங்களை சந்தித்தார். பல புறக்கணிப்புகள், வலிகள், வேதனைகள் அதிகம் சந்தித்தார். 31 ஆண்டுகால வலி குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்கள் பக்கம் உள்ள உண்மை, நியாயம் காரணமாக இன்று நான் வெளியே வந்திருக்கிறேன்.

மார்க்சிம் கார்கி தனது தாய் குறித்து எழுதிய புத்தகத்தை 4 முறை படித்துள்ளேன். 19 வயதில் சிறைக்கு சென்ற  பிறகும், எனக்கு தூக்கு தண்டனை அறிவித்த பிறகும், ஒவ்வொரு  காலக்கட்டத்திலும் ஒவ்வொரு உணர்வு கொடுத்துள்ளது.

ஒரு காலக்கட்டத்தின் முடிவுக்கு பிறகு மார்க்சிம் கார்கி தாயை, எனது தாயுடன் ஒப்பிட்டேன். எனது தாயின் வலிமை குறித்து அவரிடம் தெரிவிக்கவில்லை. காரணம், இருவருக்கும் உள்ள இயல்பான உறவுமுறை நெருடல் ஏற்படும். ஆனால், இப்போது சொல்ல விரும்புகிறேன். எனது தாயின் வேதனைக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றிதான் எனது விடுதலை. இதன்மூலம் எனது தாய் மட்டுமல்ல, எனது தந்தை, 2 சகோதரிகள், அவர்களது கணவர்கள் மற்றும் உறவினர்களின் பெரும் பலம் தான், சட்ட போராட்டத்தில் வெற்றி பெற முடிந்தது.

ஒவ்வொரு முறையும் சட்டப் போராட்டத்தில் விழும்போது எனது தாயை பார்க்க அஞ்சுவேன். எனது தாயின் உழைப்பு, அவரது வாழ்க்கையை திருடிவிட்டது அறிந்து வேதனையடைந்தேன். இவற்றுக்கு ஒரு மதிப்பாக இன்று விடுதலையாகி உள்ளேன். எனது தாயின் உழைப்பை நான் எடுத்து  கொண்டேன். தனிப்பட்ட எனது தாயின் வாழ்க்கை எனக்காகவே கழிந்துவிட்டது. தாய்  மட்டும் அல்ல, எனது குடும்பத்தாரின் போராட்டமும் சொல்ல முடியாதது.  அவர்களால்தான் நான் இங்கு இருக்கிறேன். குறிப்பாக தங்கை செங்கொடியின்  தியாகத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. இது எனது குடும்பத்தாரின் போராட்டம்  மட்டும் இல்லை. எனக்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் நான் தனிப்பட்ட முறையில்  நன்றி கூறுகிறேன். மேலும், விடுதலைக்காக  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரைத்த தமிழக அரசுக்கு எனது  குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

எனது எதிர்காலம்  பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. குடும்பத்தாருடன் கலந்து பேசி  பிறகு அறிவிப்பேன். எனது விடுதலைக்காக ஆதரவு தெரிவித்தவர்களின்  பட்டியல் நீண்டது. ஒரு சாமானியன் இதுபோன்ற வழக்கில் மாட்டிக்கொண்டால், அது  மிக பெரிய துன்பமான சட்டப் போராட்டமாக இருக்கும் என்பதற்கு நான் ஒரு  உதாரணம். 31 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வெளியே வந்து  உள்ளேன். நான் கொஞ்சம் மூச்சுவிட வேண்டும். நான் என்னை ஆசுவாசப்படுத்தி  கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையை பற்றி தாயார் யோசித்து முடிவு எடுப்பார். தாய், தந்தையர் உயிருடன் இருக்கும்போது நியாயம் வென்று நான் விடுதலையாக வேண்டும் என போராடினேன். இது எனது போராட்டம் மட்டும் அல்ல. இதற்காக பலர் போராடியுள்ளனர். எங்களுக்காக பலர் துன்பப்பட்டுள்ளனர். அவர்களை வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும், பேரறிவாளன் தனது வீட்டில் திரண்டிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், சில நிமிடங்கள் பறை மேளம் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

* வீடியோ காலில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது ‘‘31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், இனி சுதந்திர காற்றை சுவாசிப்பார்’’ என முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

* அணிகலன்கள் அணிந்தார் அற்புதம்மாள்

பேரறிவாளன் விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியவர் அவரது தாயார் அற்புதம்மாள். அப்போது முதல் தோளில் தொங்கும் ஒரு ஜோல்னா பை, வாரப்படாத தலை, சாதாரண ஆடையுடன், காதில், மூக்கில், கழுத்தில் எந்த அணிகலனும் இன்றி காணப்பட்டார் அற்புதம்மாள். அவரின் 31 ஆண்டுகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, பேரறிவாளன் விடுதலை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கிடைத்து அந்த தாயை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

அவரது உறவினர்களும் அந்த தாயிடம் இப்போதாவது காதில், கழுத்தில் ஏதாவது போட்டுக்கொள்ளுங்களேன் என்று கேட்டுக் கொண்டதால், நேற்று தீர்ப்பு வெளியான நிலையில் காதில் கம்மலோடும், கழுத்தில் செயினோடும் அற்புதம்மாள் காட்சி அளித்தார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘‘உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் அணிந்து கொண்டேன்’’ என்றார்.

* தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி

தமிழக வழக்கறிஞர் குழுவில் இடம்பெற்றிருந்த குமணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் அமைச்சரவையின் தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் வரலாற்று பிழையை செய்து விட்டார். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரு விரிவான விசாரணையை மேற்கொண்டு உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது மாநில அரசின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்’’ என்றார்.

* ஒன்றிய அரசுக்கு ஹாட்ரிக் தோல்வி

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு பல்வேறு முட்டுக்கட்டையையும், தடுப்பையும் செயல்படுத்தியது. ஆனால் அது அவர்களுக்கே எதிராக தான் அமைந்தது. முதலில், பேரறிவாளன் மரண தண்டனையை, ஆயுளாக உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்தது. இரண்டாவதாக கடந்த மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்துள்ளது. இதன் மூலம் பேரறிவாளன் விவகாரத்தில் ஒன்றிய அரசு ஹாட்ரிக் தோல்வியை கண்டுள்ளது.

* முதல்வருக்கு நன்றி

பேரறிவாளனின் தாய்  அற்புதம்மாள் கூறுகையில், `எனது மகனுக்காக  தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். முகம் தெரியாத நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. பேரறிவாளனுக்கு 9 மாதம் ஜாமீன் வழங்கியதுடன், பரோல் வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். தற்போது விடுதலையாகி உள்ளதற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதற்காக நன்றி தெரவிக்கிறேன்’’ என்றார்.

* வீட்டில் சுபநிகழ்ச்சி

பேரறிவாளன் சிறைவாசத்துக்கு சென்றது முதல் அவரது வீட்டில் எந்தவித சுபநிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. தற்போது அவர் விடுதலையாகியுள்ளார். அதனால் விரைவில் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமடையும் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர் அவரது உறவினர்கள். அற்புதம்மாள் கூறும்போது, ‘‘இனிதான் என் மகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 10 மாதம் கருவறையிலும், 19 ஆண்டுகள் வெளியுலக வாழ்க்கையிலும், 31 ஆண்டுகள் சிறையின் அறையிலும் இருந்த என் மகனுக்கு இனி வசந்த காலம்தான். ஆகவே, விரைவில் திருமணம் நடக்கும்’’ என்றார்.

* 10 முறை பரோல் நீட்டிப்பு

பேரறிவாளன் உடல்நலக்குறைவு கரணாக அவருக்கு பரோல் வழங்குமாறு தாய் அற்புதம்மாள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையால் அவருக்கு 8 முறை பரோல் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 20ம் தேதி பரோல் முடியவிருந்த நிலையில் மேலும், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டன. கடந்த 2022 பிப்ரவரி 21ம் தேதி 10 வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு தமிழக அரசு வழங்கியது.

* தொலைக்காட்சி மூலம் விடுதலை அறிந்தார்

நேற்று முன்தினம் பேரறிவாளனுக்கு உடல்நிலை பாதித்திருப்பதாகவும் அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என்றும் தகவல் வெளியானது. ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீடும் பூட்டிக்கிடந்தது. இந்த நிலையில் பேரறிவாளன் திருப்பத்தூரில் உள்ள திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவரது வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்துள்ளார். நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன? என்று பேரறிவாளன் பெற்றோருடன் ஆர்வத்தோடு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பேரறிவாளன் விடுதலை என்ற செய்தி வந்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அவரது தாய் அற்புதம்மாள் ஆனந்த கண்ணீர்விட்டபடி பேரறிவாளனை கட்டியணைத்து முத்தமிட்டார். அவரது தந்தை ஊன்றுகோலை விட்டுவிட்டு எழுந்து மகனை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். அந்த இடமே மகிழ்ச்சியில் திளைத்தது. இதையடுத்து அங்கிருந்த பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் காரில் ஜோலார்பேட்டை வீட்டிற்கு சென்றார்.

* பறையிசை அடித்து மகிழ்ச்சி

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடம் பேரறிவாளனின் வீட்டிலும், அவர் வசிக்கும் ஊரிலும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது. தீர்ப்பை அறிந்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியில் திளைத்த பேரறிவாளன், வீட்டுக்கு வெளியே திரண்டிருந்த உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வந்தார். அப்போது பறையிசை முழங்கியது. அதில் ஒன்றை வாங்கிய பேரறிவாளன் பறையிசையை முழங்கினார்.

* பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

31 ஆண்டுகாலம் சிறைவாசத்துக்கு பின்னர் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில், அவரது வீட்டின் முன்பு கூடியிருந்த உறவினர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உறவினர்கள் பேரறிவாளனை கட்டி அணைத்து முத்தமிட்டனர். இதனால் அந்த இடமே நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது.

* 2 பேரை வணங்கினார்

ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து நிருபர்களை சந்திக்க வந்த பேரறிவாளன், அவரது வீட்டில் வைத்திருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணஐயர் மற்றும் செங்கொடி ஆகியோரது புகைப்படங்களை வணங்கிவிட்டு வந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பேரறிவாளன் மீது எந்த குற்றமும் இல்லை, அவரை விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என மண்டியிட்டு கேட்கிறேன் என்று கடிதம் எழுதியவர் நீதிபதி கிருஷ்ணஐயர். செங்கொடி என்பவர் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர். இவர் 2011ல் பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிர் விட்டவர்.

Related Stories: