ரயில், சாலை போக்குவரத்து துண்டிப்பு அசாமில் மழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு: மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்

கவுகாத்தி: அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது. ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு  மாநிலமான அசாமில் பெய்துவரும் கனமழையால் 26 மாவட்டங்களில் நான்கு  லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார்  மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. மீட்பு நடவடிக்கைகளுக்கு ராணுவம்  வரவழைக்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர்  ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். ராணுவம்  மற்றும் அசாம் ரைபிள்கள் படைகள் கச்சார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்  அறிக்கையின்படி, கச்சார் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 96,697 பேர்  மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,089 கிராமங்கள் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன. 32,944.52 ஹெக்டேர் பயிர் நிலங்கள் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளன. மாவட்ட நிர்வாகம் 89 நிவாரண முகாம்களையும், 89 பொருட்கள்  விநியோக மையங்களையும் அமைத்துள்ளது. இதுவரை இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று  பேர் கச்சார் மாவட்டத்தில் மழையால் இறந்துள்ளனர். பிரம்மபுத்திரா நதியின்  நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. பல கிராமங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. ஜதிங்கா-ஹ்ரங்கஜாவோ மற்றும் மஹூர்-ஃபிடிங்கில் ரயில் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. திமாஹாசாவ் மாவட்டத்தில் உள்ள நியூ ஹாஃப்லாங் ரயில் நிலையம் வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது. அதன் கட்டுமானம் முழுமையாக சேதமடைந்துள்ளது அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

பெங்களூருவில் இரவெல்லாம் மழை

இந்திய வானிலை மையத்தின் அறிக்கையின்படி, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்  அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக மாநிலம் பெங்களூரு  கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திடீர் மழையால் கிரீன் லைன் மெட்ரோவின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இருப்பினும், சில மணி நேரங்கள் கழித்து மின்சாரம் மீண்டும் வந்ததால் மெட்ரோ  சேவைகள் தொடங்கின. கனமழை காரணமாக, பீன்யா மற்றும் புத்ரா ஹள்ளியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துள்ளன. ஜே.பி.நகர், ஜெயநகர், லால்பாக், சிக்பெட், மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், யஷ்வந்த்பூர் உள்ளிட்ட இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

Related Stories: