×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி அடிக்க முயற்சி மாணவர்களிடம் ‘மைக்ரோ ஜெராக்ஸ்’ பிட் பேப்பர்கள் ஒரு கிலோ பறிமுதல்: நாமக்கல்லில் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களிடம் இருந்து ஒரு கிலோ அளவுக்கு மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்து கல்வி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வுகள் கடந்த இரு வாரத்துக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று முன்தினம் பிளஸ் 1 மாணவர்களுக்கு உயிரியியல், வரலாறு தேர்வுகள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்.குமார் கொல்லிமலையில் உள்ள தேர்வு மையத்திற்கு ஆய்வு செய்யச்சென்றார்.

வழியில் செம்மேட்டில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில், மாணவர்கள் கூட்டமாக நிற்பதை பார்த்த இணை இயக்குநர் அந்த கடைக்கு சென்று பார்த்தபோது, மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்க புத்தகம், நோட்ஸில் உள்ள முக்கியமான கேள்விகளின் விடைகளை மைக்ரோ ஜெராக்ஸ் (மிகச்சிறிய அளவில்) எடுத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அவர் அவைகளை பறிமுதல் செய்துவிட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம், மாணவர்களின் தவறுக்கு துணை போகாதீர்கள் என எச்சரித்தார்.

இந்நிலையில், நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதத்தேர்வு நடைபெற்றது. தேர்வு துவங்க அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே, பறக்கும் படையினர் நேற்று பல்வேறு மையங்களுக்குச் சென்று, மாணவர்களிடம், பிட் பேப்பர் இருந்தால் முன்கூட்டியே கொடுத்துவிடும்படி எச்சரித்தனர். இதையடுத்து பல்வேறு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிக்க கொண்டு வந்திருந்த மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை கொடுத்து விட்டனர். இது குறித்து இணை இயக்குநர் பொன்.குமார் கூறுகையில், குமாரபாளையத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு நானே சென்று ஆய்வு  செய்தேன். மாணவர்களிடம் இருந்து தேர்வு துவங்கும் முன், பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல பள்ளிபாளையம், கொல்லிமலை தேர்வு மையங்களிலும் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் மைக்ரோ ஜெராக்ஸ் என்ற அளவில், சுமார் ஒரு கிலோ எடை இருந்தது என தெரிவித்தார்.

Tags : Micro Xerox ,Namakkal , One kg of 'Micro Xerox' bit papers confiscated from students trying to make coffee in Plus 2 general examination: Education officials take action in Namakkal
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...