தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலி: அதிர்ச்சியில் மனைவியும் சாவு

மேச்சேரி: தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலியானார். இந்த துக்கத்தில் அவரது மனைவியும் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பண்ணன்(95). இவரது மனைவி குஞ்சம்மாள் (92). நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின்போது பாப்பண்ணனின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் முதிய தம்பதியால் தண்ணீரை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் இருவரும் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கினர். இரவு 11 மணியளவில் பாப்பண்ணன் கட்டிலில் இருந்து இறங்கியுள்ளார்.

அப்போது மழைநீரில் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து குஞ்சம்மாள் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது பாப்பண்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குஞ்சம்மாள் சோகத்தில் மூழ்கினார். இதனிடையே சோகத்தில் இருந்த குஞ்சம்மாள், நேற்று அதிகாலை 5 மணியளவில்  திடீரென மயங்கி விழுந்தார். பரிசோதித்ததில் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து தாரமங்கலம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதிய தம்பதிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: