×

எலக்ட்ரீசியனை தாக்கி நகை, கார் கொள்ளை வழக்கு வாகன சோதனையில் தனிப்படையினரிடம் சிக்கிய 5 பேரில் ஒருவர் தப்பியோட்டம்-பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தில் எலக்ட்ரீசியனைத் தாக்கி நகை, காரை திருடிச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசாரிடம் சிக்கினர். இதில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது ஒருவன் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் கடந்த 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் பாண்டியன்(59) என்பவரது வீட்டின் தாழ்பாளை உடைத்து உள்ளே புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், பாண்டியனை தாக்கி அவரது மகளிடமிருந்து 3 பவுன் தாலிசெயின், முக்கால் பவுன் மோதிரங்கள் ஆகியவற்றை கத்தி முனையில் மிரட்டிப் பறித்ததோடு வீட்டில் நிறுத்தி வைத்திருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான காரையும் கடத்திக் கொண்டு தப்பிச் சென்றது.

தகவலறிந்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிந்தார். இதில் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது. அதில் மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற கார் வழித்தடங்கள் சிசிடிவி கேமராக்கள் மூலமாக தொடர்ந்து ஆராயப்பட்டு மறுநாள் சென்னை ஆர்கே நகரில் கார் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டு தனிப்படையினரால் மீட்கப்பட்டது. விசாரணையில் மேற்படி கொள்ளை சம்பவத்தில் 9 மர்ம நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனிடையே பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் கிரைம் டீம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ராம்குமார் உள்ளிட்ட தனிப்படையினர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காரில் வந்த 5 பேரையும் கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் காரில் வந்தவர்கள், சிவகங்கை மாவட்டம் வேளாங்குளம், முருகன் கோயில் தெரு வைச் சேர்ந்த சூர்யா(23), அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித்(25), மதுரை மாவட்டம் வரிச்சூர் உரங்கன்பட்டியை சேர்ந்த அழகர் பாண்டியன்(32), சென்னை பெருங்குடியை சேர்ந்த பிரசாந்த்(26), பெரம்பலூர் சமத்துவபுரம் ஆலம்பாடி ரோட்டில் வசிக்கும் சுப்பிரமணியன்(48) ஆகியோர் என்பதும், இவர்கள்தான் அம்மாபாளையம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து மூன்றே முக்கால் பவுன் நகைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்த 5 பேரையும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது புறநோயாளிகள் பிரிவின் அருகே சென்றபோது கொள்ளையர் 5 பேர்களில் ஒருவரான பிரசாந்த் என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மற்ற 4 நபர்களை மட்டும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். வழக்கில் சம்பந்தப்பட்டு தப்பியோடிய பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.அம்மாபாளையம் எலக்ட்ரீசியன் வீட்டு கொள்ளை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையரை கைது செய்த தனிப்படைப் போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி, டிஎஸ்பி., சஞ்சீவ்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Perambalur , Perambalur: Police have nabbed a gang of 5 people who attacked an electrician at Ammapalayam near Perambalur and stole jewelery and a car.
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி