மீஞ்சூர் அருகே மனைவி, குழந்தைகள் கண் முன்னே பஞ்சாயத்து தலைவர் கொலை: கொலையாளியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்றத்தலைவர் மனோகரன், அதிமுகவில் வடக்கு மாவட்ட அம்மாபேரவை இணை செயலாளராக இருந்தார். அவர் குருவி மேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, தன மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று, காரின் மீது வேகமாக மோதியது.

இதில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில், லாரியில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்டோர் மனோகரனை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மனோகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்து, கொண்டகரை ஊராட்சி பொதுமக்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி பொன்னேரி- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொழிற்போட்டி காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.        

Related Stories: