நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது: நாளொன்றுக்கு ரூ.360 கோடி இழப்பு அபாயம்

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தம் நடத்தபப்டுகிறது. திருப்பூரில் 10,000 பின்னலாடை நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிருவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்தது.

பஞ்சு விலை ஒரே ஆண்டில் 2 மடங்கு உயர்ந்து ஒரு கேண்டி ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதால் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பருத்தி பதுக்கலை கண்டருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்கால் நாளொன்றுக்கு ரூ.360 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பருத்தி, நூல் ஏற்றுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். கோவை, கரூர், ஈரோடு, சேலம், பகுதிகளிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: