மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், விபத்தில் பலியான நிலையில், அந்நாட்டின் 3 வீரர்கள் அடுத்தடுத்த மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46). இவர் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, குயின்ஸ்லாந்தின் எல்லிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே திடீரென கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆண்ட்ரூ சைமண்ட் இறந்தார். இவரது மறைவானது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மூன்றாவது மிகப்பெரிய இழப்பாகும்.
காரணம் கடந்த மார்ச் மாதம் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஷேன் வார்ன் மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். தற்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் திடீர் மறைவால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சைமண்ட்ஸின் மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சைமண்ட்ஸின் மறைவால் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ஜேசன் நீல் கில்லெஸ்பி வெளியிட்ட பதிவில், ‘நான் காலை எழுந்தவுடன் அதிர்ச்சியான இந்த செய்தியை கேட்டு வருந்தினேன்.
என்னால் நம்ப முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் குயின்ஸ்லாந்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘விபத்து ஏற்படும் போது காரில் சைமண்ட்ஸ் மட்டுமே இருந்தார். இவரது கார் விபத்தில் சிக்கியதும், மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர், ஆனால் சைமன்ட்ஸைக் காப்பாற்ற முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ சைமண்ட்சை பொருத்தமட்டில் ஆஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். ஓய்வுக்குப் பிறகு, அவர் ஃபாக்ஸ் கிரிக்கெட் வர்ணனையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.