×

டெல்லி தீ விபத்தின் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.! நிறுவனர்கள் 2 பேர் கைது; கட்டிட உரிமையாளர் தலைமறைவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிகக்கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். முதல் மாடியில் இருந்து தீ பரவியதால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் தலைநகர் டெல்லியில், முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3 அடுக்குகள் கொண்ட வணிக வளாகக் கட்டிடம் உள்ளது; அங்கு நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்து 3 மாடிகளுக்கும் தீ பரவியதால் அப்பகுதியானது புகை மண்டலமாக மாறியது. வணிகக் கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். சிலர் கட்டடத்தில் இருந்து குதித்து உயிர்தப்பிக்க முயன்றனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் 24 வாகனங்களில் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்த போராடினர்.

வணிக வளாகத்தின் உள்ளே சிக்கி தவித்தவர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர். எனினும் 27 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகளில் தீயணைப்பு பணியினருடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து தீயை நேற்றிரவு கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், தீ காயமுற்றோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீ விபத்தில்  பலியானவர்களின் அடையாளம் குறித்த விபரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. மேற்கண்ட பயங்கர தீ விபத்து சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையர் சமீர் சர்மா கூறுகையில், ‘சிசிடிவி கேமரா மற்றும் ரூட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகம் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீயணைப்புத் துறையிடமிருந்து முறையான பாதுகாப்பு அனுமதி, வணிக கட்டிடம் பெறவில்லை. அதனால், கட்டிடத்தின் உரிமையாளர் மணீஷ் லக்ரா மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். தீ விபத்து ஏற்பட்ட போது, அதன் இரண்டாவது மாடியில் மீட்டிங் ஒன்று நடந்துள்ளது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எனவே பெரும்பாலான இறப்புகள் இந்த இரண்டாவது மாடியில் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட போது, அங்கிருந்து தப்புவதற்காக மக்கள் முயற்சித்தனர். ஆனால், ஒரே ஒரு படிக்கட்டு மட்டுமே இருந்ததால், கட்டிடத்தின் உள்ளே சிக்கியிருந்த மக்கள் வெளியே தப்ப முடியவில்லை. அதனாலும், சிலர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ‘டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : Delhi , Delhi fire death toll rises to 27 Founders 2 arrested; The building owner disappeared
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...